ரொறோண்டோ: 5,000 புதிய தொடர்மாடிக் குடியிருப்புகளைக் கட்டிட நிர்மாண நிறுவனங்கள் கைவிடலாம்
கட்டிட நிர்மாணச் செலவு அதிகரிப்பை ஈடுசெய்ய முடியாதாம்
கட்டிட நிர்மாணப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும் பணியாளர் தட்டுப்பாடு, கூலி அதிகரிப்பு ஆகியன காரணமாக ரொறோண்டோ கட்டுமான நிறுவனங்கள், ஏற்கெனவே விற்று ஆனால் கட்டி முடிக்கப்படாத 5.000 த்துக்கும் மேற்பட்ட தொடர்மாடிக் குடியிருப்புக்களைக் கைவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என வீடு விற்பனைத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ‘ஏர்பனேசன்’ (Urbanation) என்னும் நிறுவனம் கூறியுள்ளது.
இது பற்றி ஏர்பனேசன் அதிபர் ஷோன் ஹில்டெர்பிராண்ட் ரொறோண்டோ CP24 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றின்போது தாம் மேற்கொண்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டித் தனது எதிர்வுகூறலைத் தெரிவித்துள்ளார்.
வீட்டுக் கட்டுமானப் பொருட்களின் விலை வருடா வருடம் 20% த்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது எனவும் இது வீட்டு விலை அதிகரிப்பை விட அதிகமானது எனவும் இதனால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பல கட்டுமானத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாமலேயே கைவிடப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேலைவாய்ப்பு உச்சமாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பணியாளர்கள் சம்பள உயர்வைக் கேட்பதும் கிடைக்காத பட்சத்தில் வேறு வேலைகளுக்கு மாறிவிடுவதும் பொதுவான நிகழ்வாக வந்துவிட்டது. இதனால் விசேட திறமைகளைக் கொண்ட பணியாளர்கள் இல்லாது கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகின்றது. பணியாளர்களை வைத்திருக்க வேண்டுமானால் அவர்களுக்கு அதிக சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். இதனால் கட்டுமானத்தின் செலவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதை விட பன்மடங்கு அதிகமாகிவிடுகிறது. இக் காரணங்களினால் பல கட்டுமான நிறுவனங்கள் தமது திட்டமிடப்பட்ட கட்டுமானங்களைக் கைவிடத் தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
ரொறோண்டோவில் தற்போது 87,000 குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன எனவும் மேலும் 33,000 குடியிருப்புகள் நிர்மாணத்துக்கு தயாராகும் நிலையில் உள்ளனவெனவும் ஹில்டெர்பிராண்ட் தெரிவித்துள்ளார். இதே வேளை, அதிகரிக்கும் வட்டி வீதத்தினால் வீட்டு விலைகள் ஏற்கெனவே சரிவடைய ஆரம்பித்திருக்கிறது எனவும் இந்த நிலையில் கட்டுமானச் செலவு அதிகரித்து வருவதால் கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை உருவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக் குழப்பமான நிலையில் கட்டுமான நிறுவனங்கள் குடியிருப்பு நிர்மாணத்தைக் கைவிட்டால், ஒன்ராறியோ சட்டத்தின்படி செலுத்தப்பட்ட முற்பணத்தைத் திருப்பக் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான வட்டியை அவர்கள் திருப்பிக் கொடுப்பார்களா என்பது நிச்சயமில்லை. அத்தோடு அப் பணத்தைக் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து திருப்பிப் பெறுவதற்கு சில வேளைகளில் பல வருடங்கள் கூட எடுக்கலாம்.
இதே வேளை ரொறோண்டோவில் வீட்டு விலைகள் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக வீழ்ந்து கொண்டிருப்பினும் சென்ற வருட விலையை விட 10% உயர்வாகவே இருப்பதாக ரொறோண்டோ வீடு விற்பனைச் சபை தெரிவித்துள்ளது.