Real Estate

வீடு நிர்மாணம்: Tarion $90 மில்லியன் முற்பண மீளீடு வழங்கவேண்டி ஏற்படலாம்

ஒன்ராறியோ மாகாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வாங்குபவர்களுக்கு உத்தரவாத உறுதியை வழங்கும் நிறுவனமான Tarion $90 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை முற்பண மீளீடாக (deposit return) வழங்கவேண்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒன்ராறியோவின் வரலாற்றில் இப்படியான பெருந்தொகை வழங்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் கூறப்படுகிறது.

வட்டி வீத அதிகரிப்பினால் ஏற்பட்ட நிர்மாணச் செலவீன அதிகரிப்பு மற்றும் விற்பனைக் குறைவு ஆகிய காரணங்களினால் ஒன்ராறியோவின் பல வீட்டு நிர்மாண நிறுவனங்கள் தமது கட்டிட நிர்மாண செயற்பாடுகளை இடைநிறுத்திவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள் எனவும் இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வீடுகளை வாங்குவதற்கெனச் செலுத்திய முற்பணத்தை இடையில் பொறுப்பு நின்ற Tarion நிறுவனமே திருப்பிக் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதெனவும் கூறப்படுகிறது.

வீட்டு நிர்மாண நிறுவனங்கள் தமது கட்டிட நிர்மாணத்தை ஆரம்பிக்கு முன் திட்டமிடப்பட்ட குடியிருப்பின் பெரும்பாலான வீடுகளை விற்று முற்பணத்தை வாங்கி விடுகிறார்கள். இம்முற்பணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு Tarion நிறுவனம் உத்தரவாதம் வழங்குகிறது. இந்த Tarion நிறுவனம் மாகாண அரசின் கட்டளைக்கிணங்க அரச / தனியார் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒன்று. முற்பணப் பாதுகாப்புக்கு அப்பாலும் வீட்டு நிர்மாணத்தின் போது ஏற்படும் தவறுகளினால் கட்டிடங்கள் பாதிப்படைந்தால் அதைக் கட்டிட நிர்மாண நிறுனங்கள் இலவசமாகச் செப்பனிட்டுக் கொடுக்கவேண்டும். வீடுகளை வாங்குபவர்கள் இதற்காக Tarion நிறுவனத்திற்கு ஒரு சிறு தொகையை வழங்குகிறார்கள். நட்ட ஈடு கொடுப்பனவு தேவையற்றபோது இப்பணம் Tarion சேமிப்பில் வைக்கப்படுகிறது.

வீடுகளை நிர்மாணிக்க ஒரு நிறுவனம் தவறும்போது அது பெற்ற முற்பணத்தை வாடிக்கையாளருக்கு திருப்பிக் கொடுப்பது வழக்கம். ஆனால் அந்நிறுவனம் வங்குரோத்துக்கு விண்ணப்பித்தால் அம் முற்பணத்தை Tarion நிறுவனவே வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

ஜனவரி 1, 2018 இற்குப் பின்னர் ஒன்ராறியோ மாகாணத்தில் புதிய வீடுகளை வாங்குபவர்கள் வீட்டு விலையாக $600,000 வரை கொடுத்திருந்தால் வீடு அவர்களது பெயருக்கு வழங்கப்படாவிட்டால், அவர்கள் செலுத்திய முற்பணத்தின் $60,000 டாலர்களை நிர்மாண நிறுவனம் அல்லது Tarion திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். வீட்டின் விலை $600,000 இற்கு மேலாக இருப்பின் முற்பணத்தின் $100,000 டாலர்களை அவை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

ஒன்ராறியோவில் கடந்த வருடம் எத்தனை நிர்மாண நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குப் போயுள்ளன என்ற தரவு இதுவரை Tarion நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதால் இதுவரை கிடைத்த தரவுகளின்படி குறைந்தது $90 மில்லியன் டாலர்களாவது நட்ட ஈடாக Tarion வழங்கவேண்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப்பணம் உடனடியாக முற்பணம் செலுத்தியவர்களின் கைகளில் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. நிர்மாண நிறுவனங்களின் வங்குரோத்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இப்பணம் வாடிக்கையாளர்களுக்கு மீளக் கொடுக்கப்படும். (Photo by Troy Mortier on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *