Real Estate

வீடு விற்பனை: ஒன்ராறியோவில் புதிய சட்டங்கள் அறிமுகம்

ஒன்ராறியோவில் வீடுகளை வாங்குபவர்களுக்கு அதிர்ஷடம் (சிலவேளை) காத்திருக்கிறது. கடந்த வெள்ளி (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் சட்டப்படி வீட்டை விற்பவர்களோ அல்லது வீடு விற்கும் முகவர்களோ வாங்குபவர்களிடம் போட்டிகளை ஏற்படுத்தி விற்பனை விலையை உயர்த்துவதற்கான வழிமுறைகளில் மாற்றம் வருகிறது. வாங்குபவர் ஒருவர் ஏற்கெனவே கொடுத்த விலையையோ அல்லது நிபந்தனைகளையோ விற்பவர் விரும்பும் பட்சத்தில், இதர ‘வாங்குபவர்களுக்குப்’ பகிரங்கமாக அறிவிக்க முடியும். ஏறத்தாழ ஏல விற்பனை போன்ற ஒன்றுதான் இதுவும்.

வங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இது மேலதிகமான தெளிவைக் கொடுக்குமென ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில் வீடு விற்பனைத் துறையைக் கண்காணித்து வரும் ஒன்ராறியோ வீடு விற்பனை ஆணையம் (Real Estate Council of Ontario (RECO) ) கூறுகிறது.

இச்சட்ட அறிமுகம் முகவர்கள் தொடர்பான சில மாற்றங்களைக் கொண்டுவந்திருப்பினும் எமது வாசகர்களுக்கு அவற்றில் அதிக அக்கறை இருக்காது என நம்பலாம். ஆனால் வீடுகளை வாங்குபவர்களுக்கு இம் மாற்றம் சாதகாமான ஒன்று என்பது உறுதி.

இப்படியான சட்டமாற்றம் ஒன்றை வலியுறுத்தி ஒன்ராறியோ பசுமைக்கட்சி நீண்டகாலமாகப் போராடி வந்திருக்கிறது எனினும் அக்கட்சியின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மத்திய லிபரல் கட்சியும் தனது 2021 தேர்தல் விஞ்ஞாபனத்தில் திறந்த ஏல முறையைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

வீடுகளை வாங்குபவர்கள் பொதுவாக முகவர்களின் ஆலோசனைக்கேற்ப கண்மூடித்தனமாகக் கேட்டு விலைகளை அதிகரிக்க வைக்கிறார்கள் என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. இதனால் தான் ஒன்ராறியோவில் வீட்டு விலைகள் அதிகரித்தன என பசுமைக் கட்சி கூறிவருகிறது. இதற்கு ஒன்ராறியோ வீடு விற்பனை முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இதன் பலனாக அவுஸ்திரேலியாவில் உள்ளதைப்போல ஒரு முழுமையான ஏல விறபனையை அனுமதிக்காது ‘விற்பவர்கள் விரும்பினால் தமக்குக் கிடைத்த ‘விலைகளை’ ஏனையவர்களுக்குப் பகிரங்கப்படுத்தலாமென்கிறது இப் புதிய சட்டம்.

ஆனாலும் “இந்த ‘மூடிய’ விற்பனை முறை எந்தளவு தூரத்திற்கு விலைகளை அதிகரிக்க வைக்கிறது என்பது பற்றிய போதுமான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அவுஸ்திரேலியாவில் பிரயோகிக்கப்படும் ‘திறந்த’ விற்பனை முறை உண்மையில் விலைகளை அதிகரிக்க வைத்துவிட்டது என்பதும் ஒரு கருத்து” என ஒன்ராறியோ வீடு விற்பனை ஆணையத்தின் பதிவாளர் ஜோசெஃப் றிச்சர் தெரிவித்துள்ளார். “இருப்பினும் வாங்குபவர்களுக்குச் சாதகமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது விற்பவர்களைப் பாதிக்கும் எனவே இரு சாராருக்கும் தேர்வுக்கான வழிமுறைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதே எமது தீர்வு. இதனால் பாரதூரமான சந்தை மாற்றம் நடைபெறுமென நாம் எதிர்பார்க்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டுச் சந்தையில் அதிக வீடுகள் விற்பனைக்கு இருக்கும்போது வாங்குபவர்கள் குறைவாக இருப்பின் அதை ‘வாங்குபவர்களுக்குச் சாதகமான’ சந்தை (buyers’ market) என அழைப்பார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் வாங்குபவர்களை ஈர்ப்பதற்காக விற்பவர் தனக்குக் கிடைத்த இறுதி விலையைப் பகிரங்கமாக அறிவிப்பதற்கான தேர்வை இச் சட்டம் கொடுக்கிறது. சந்தை விற்பவர்களுக்குச் சாதகமாக இருப்பின் விற்பவர்கள் தமக்குக் கிடைத்த விலைகளைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்கிறது இந்தச் சட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *