veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Real Estate

வீட்டுச் சந்தை: ஒன்ராறியோவில் 20% வீடுகளும், 42% தொடர்மாடிக் குடியிருப்புக்களும் முதலீட்டிற்காக வாங்கப்பட்டவை – கனடிய புள்ளிவிபரத் திணைக்களம்

கனடாவில் முதல் தடவையாக வீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்கு பற்றிய புள்ளிவிபரத்தை கனடிய வீடுவிற்பனைப் புள்ளிவிபரத் திணைக்களம் (CHSP) வெளியிட்டிருக்கிறது. இக் கணக்கெடுப்பின்படி நோவா ஸ்கோஷியா, நியூ பிறண்ஸ்விக், ஒன்ராறியோ, மனிற்றோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் 2020 இல் வீடுகளின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதன் பிரகாரம்:

  1. ஒன்ராறியோவில் 2020 இல் வீடுகளை வாங்கியவர்களில் 20.2% முதலீட்டாளர்கள். நோவா ஸ்கோஷியாவில் இது 31.5%
  2. ஒன்ராறியோவில் 42% மான முதலீட்டாளர்கள் தொடர்மாடிக் குடியிருப்புக்களை வாங்கியிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் இது 20%.
  3. பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதே மாகாணங்களில் வேறு வீடுகளில் வசிக்கிறார்கள்.

2021 இல் கனடா ரீதியில் எடுக்கப்பட்ட குடிசனக் கணிப்பின்படி 2011 இல் வீட்டுரிமையாளர்களின் விகிதாசரம் 69.0% ஆக இருந்து 2021 இல் அது 66.5% மாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வட்டி வீதக்குறைப்பை இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் – மத்திய வங்கி ஆளுனர்

இதே வேளை நாட்டின் பணவீக்கத்தைக் குறைப்பதற்கென கனடிய மத்திய வங்கியினால் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்டி வீத உயர்ச்சி தளர்த்தப்படுதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய வங்கி ஆளுனர் ரிஃப் மக்லெம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு தடவைகள் வட்டி வீதம் அதிகரிக்கப்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவேயொழிய குறைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என அவர் பெப்ரவரி 7 அன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். பணவீக்க அதிகரிப்பு நிறுத்தப்பட்டு குறைய ஆரம்பிக்குமானால் வட்டி வீத அதிகரிப்பும் நிறுத்தப்பட்டு பணவீக்கத்தின் திசை உறுதிப்படுத்தப்படுமட்டும் வட்டி வீத அதிகரிப்பும் நிறுத்தப்படுமே தவிர குறைக்கபடுமென எதிர்பார்க்க வேண்டாமென அவர் கூறியுள்ளார்.

கனடாவின் 28 நிதி நிபுணர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் இந்த வருட இறுதியில் வட்டி வீதம் 4.5 % த்திலிருந்து 4.0% வீதத்திற்குக் குறையுமென எதிர்வுகூறியிருந்தார்கள். இதை மறுதலிக்கும் விதத்தில் ஆளுனர் தனது அறிக்கையில் வட்டி வீதம் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என மிகவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதே வேளை யூக்கிரெய்ன் போர் மற்றும் இதர உலக பொருளாதாரச் சுருக்கம் காரணமாக கனடிய பொருளாதாரம் அழுத்தத்துக்குள்ளாகும் (recession) எனச் சிலர் கருதுவதால் அதைச் சமாளிக்க ஆளுனர் வட்டியைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. (Photo by Amanda Canas on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *