வீட்டுச் சந்தை ‘சூடாகிறது’
கனடாவின் வீட்டுச் சந்தை எதிர்பார்த்ததை விட வேகமாக ‘சூடாகிக்கொண்டுள்ளதாக’ எச்சரிக்கிறார் மத்திய வங்கியின் ஆளுனர் ரிஃப் மக்லெம். இவ்வெச்சரிக்கையின் பின்னாலுள்ள செய்தி என்ன?
அது எவ்வகையான சந்தையாகவிருந்தாலும் மக்களின் கொள்வனவு அதிகரிக்கும்போது அவர்களின் பைகளில் பணப் புழக்கம் அதிகமாகவிருக்கிறது என்பதே அர்த்தம். இதன் விளைவாக, வியாபாரிகள் தமது பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது வழக்கம். இந்நடைமுறை இறுதியில் பணவீக்க அதிகரிப்பில் (inflation) வந்து முடியும். (பைகள் வீங்குவது பண வீக்கம்) பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை அதிகரிப்பது மத்திய வங்கிகளின் வழக்கம். எனவே மத்திய வங்கி ஆளுனரின் இந்த அறிவிப்பு ‘விரைவில் வட்டி வீதம் அதிகரிக்கப் போகிறது’ என்பதையே பூடகமாகக் கூறுகிறது என் எதிர்பார்க்கலாம்.
தற்போதைக்கு அவர் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு முடியாது. அதற்குக் காரணம் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொருளாதாரம் சீரழிந்து இருக்கிறது; வேலை வாய்ப்பு சரிவடைந்துகொண்டு போகிறது. அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரிக்குப் பதிலாக நிவாரணத் தேவைகளுக்கு அது பணத்தை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் வழமையான பொருளாதார வாய்பாடு இங்கு பிழைத்துப் போகிறது. பொருளாதாரம் சரிவடைந்து போகின்றபோது எப்படி மக்களின் பைகளில் அதிக பணம் சேர்ந்துகொள்கிறது?
தற்போதைய வீட்டுச் சந்தை ‘சூடாக’ இருப்பதற்குக் காரணம் பல. அவற்றில் முதன்மையானது அதி குறைந்த வட்டி வீதம். இதனால் மக்கள் மனங்களில் அதீத நம்பிக்கை வந்துவிடுகிறது.
அடமானம் இப்போது அரசாங்கத்தின் பிரச்சினை
இரண்டாவது முக்கியமான காரணம், வீட்டு அடமானக் கடன்களை ஒருவர் கட்ட முடியாது போனால் அது வங்கிகளின் பிரச்சினை அல்ல என்பதால் வங்கிகள் தாராளமாக அடமானங்களை அள்ளிக் கொடுத்து பிரச்சினைகளை அரசாங்கத்தின் தலையில் கட்டி விடுகின்றன. அதாவது வங்கிகள் தற்போது ஏஜண்டுகள் மாதிரியாகவே நடந்துகொள்கின்றன. எப்படி?
வங்கி ஒன்று உங்களுக்கு 500,000 டாலர் அடமானத்தைத் தருகிறது என வைத்துக்கொள்வோம். இந்த அடமானத்தை அது உடனேயே அரசாங்கத்தின் மத்திய வங்கிக்கு விற்றுவிடுகிறது. பெயரளவுக்கு வீட்டின் அடமானம் வங்கியில் வைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான முதலீட்டை மத்திய வங்கியே செய்திருக்கிறது. மத்திய வங்கி முதலீட்டாளரிடம் வட்டிக்கு எடுக்கும் பணத்தில் இந்த அடமானக் கொள்வனவைச் செய்துகொள்கிறது. குறைந்த வட்டியென்றாலும், ஒரு அரசாங்கத்திடம் தமது முதலீடு இருப்பது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு என்பதால், உயர் வட்டிக்கு ஆபத்தான முதலீடுகளில் தமது பணத்தை முடக்காது பாதுகாப்பான இடத்தில் அவர்கள் முதலிடுகிறார்கள். கோவிட் காரணமாக உலக முதலீட்டுச்சந்தை ஆட்டம் கண்டுவரும் வேளையில் அரசாங்கத்திடம் குறைந்த வட்டிக்குத் தமது முதலீட்டைக் கொடுத்துவைத்திருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களது பணத்துக்கு ஈடாக வீடுகள் இருப்பதால் இதை Mortgage backed securities என அழைக்கிறார்கள்.
உலக பொருளாதாரம் முன்னேறுகிறது, வேறு இடங்களில் அதிக வட்டிக்கு முதலிடலாம் என முதலீட்டாளர்கள் நினைக்கும்போது அவர்கள் அதிக வட்டியை நாடி ஓடுவார்கள். அவர்களைத் தொடர்ந்தும் தம்மிடம் முதலீடு செய்யும்படி வற்புறுத்த அரசாங்கமும் (மத்திய வங்கி) முதலீட்டாளர்களுக்குத் தாம் கொடுக்கும் வட்டியை உயர்த்த வேண்டும். அப்ப்டிச் செய்யும்போது கனடிய சில்லறை வங்கிகளுக்கு மத்திய வங்கி கடன் கொடுக்கும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கும். இதனால் அடமான வட்டியும் அதிகரிக்கும்.
கோவிட் தொற்று இப்போதைக்கு நகரும் எண்ணைம் இல்லையெனவும், மூன்றாம் கோவிட் போருக்குத் தயாராகும்படியும் அரசாங்கங்கள் எச்சரிக்கை செய்து வருகின்ற நிலையில் உடனடியான வட்டி வீத அதிகரிப்புக்குச் சந்தர்ப்பமில்லை. ஆனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதற்காக மக்களுக்கு விடுகின்ற எச்சரிக்கையே இது.
இதை விட, மக்கள் விடுமுறைகளுக்குச் செல்லாமையாலும், பெருங் கொள்வனவுகளைச் செய்யாமையாலும், அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்வதாலும் அவர்களின் பைகளில் பெருமளவு பணம் தேங்கிக் கிடக்கின்றது. குறைந்த வட்டி அனுகூலத்தைப் பாவித்து இந்த மேலதீக பணத்தை அவர்கள் வீடுகளில் முதலீடு செய்கிறார்கள்.
அத்தோடு இன்னுமொரு ஆபத்தும் கனடிய வீட்டு முதலீட்டாளர்களை எதிர்நோக்கியிருக்கிறது. அமெரிக்காவில் ட்றம்ப் நிர்வாகம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு புதிய குடிவரவாளர்கள் படையெட்டுக்க ஆரம்பிப்பார்கள். ‘பச்சை மட்டை’ கொடுப்பதை ட்றம்ப் நிறுத்தி வைத்திருந்தார். தற்போது ஜனாதிபதி பைடன் அதை மீளவும் அனுமதித்திருக்கிறார். கனடாவுக்குள் படையெடுத்த பலர் திரும்பிப் போக எத்தனிப்பார்கள்.
26 வாரங்களுக்குத் தொடர்ந்து வேலையற்று இருப்பவர்களின் தொகை தற்போது 500,000 த்திற்கும் மேலாக இருக்கிறது. 30 வருடங்களுக்கு இப்படியான நிலை இருந்ததில்லை என்கிறார் ஆளுனர். இதனால் முதலாளிகள் அரசுக்கு வழங்கும் சம்பள வரி (payroll tax) அடிபட்டுப் போகிறது.
பொருளாதாரத்தை முன்னேற்றி, வேலை வாய்ப்புகளை அதிகாரிக்காமல் வீட்டு விலைகள் மட்டும் அதிகரிப்பது மத்தியவங்கி ஆளுனரின் கவனத்தை ஈர்த்திருப்பது தெரிகிறது. வீட்டு விலைகள், அடமானக் கொடுப்பு விடயங்களில் மிகுந்த அவதானமாக இருக்குபடி சில்லறை வங்கிகளை அவர் எச்சரித்திருப்பதாகத் தெரிகிறது.
“வீட்டு விலைகள் அதிகரிக்கப் போகிறது என்பதற்காகவே வீடுகளை மக்கள் வாங்க முயற்சிப்பது ஆபத்திற்கான முன்னெச்சரிக்கை” என ஆளுனர் தெரிவித்திருப்பது அவரின் அடுத்த நகர்வு மகிழ்ச்சி தரமாட்டாத ஒன்றாக இருக்கலாம் என்பதையே காட்டுகிறது.