veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

வீட்டுச் சந்தை| 2023 இல் கனடாவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

  • முதலாவதாக வீடு வாங்குபவர்களுக்கான சலுகைகள்
  • வெளிநாட்டார் வீடு வாங்குவதில் தடை
  • இலாப நோக்கில் வீடு வாங்கி விற்பவர்கள் மீது விசேட வரி
  • இரண்டாம் குடியிருப்பு நிர்மாணத்திற்கான வரிச் சலுகை

கனடிய வீட்டுச் சந்தையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு இந்த வருடம் (2023) தனது வரிச்சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த மூன்று , நான்கு வருடங்களாக கனடாவின் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் வீடுகளின் விலைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மத்திய அரசின் குறைந்த கடன் வட்டி வீதம் எனச் சிலரும் வெளிநாட்டார் இலாப நோக்கில் இங்கு வீடுகளில் முதலீடு செய்வதே காரணம் எனச் சிலரும் கூறி வருகிறார்கள். இதனால் மத்திய அரசு இந்த இரண்டு சந்தேகங்களையும் போக்கும் வகையில் சென்ற வருடம் வட்டி வீதத்தைச் சடுதியாகவும் பல நூறு மடங்கிலும் அதிகரித்தும் இந்த வருடம் வெளிநாட்டார் வீடுகளை வாங்குவதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடையை விதித்தும் பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறது. அத்தோடு முதல் தடவையாக வீடுகளை வாங்குபவர்களுக்கு பல வரிச் சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. அவற்றில் சில பற்றி இங்கே விளக்கம் தருகிறோம்.

இலாப வரி

வீடுகளை வாங்கிய உடனேயே அதிக இலாபத்துக்கு விற்று (home-flipping) இலாபமீட்டுவது சில முதலீட்டாளர்கள் செய்யும் நடைமுறை. இதைக் கட்டுப்படுத்த 2022 வரவு செலவுத்திட்டத்தில் மத்திய அரசு வரி அதிகரிப்பை அறிவித்திருந்தது. இச் சட்டத்தின் பிரகாரம் ஒருவர் வீடொன்றை வாங்கி 12 மாதங்களுக்குள் விற்று ஈட்டும் இலாபம் அந்நபரின் அவ்வருடத்தின் வருமானமாகவே கணிக்கப்படும்.

இலாபம் சம்பாதிப்பதற்காக வீடுகளை வாங்கி விற்கும்போது சந்தையில் வீடுகளுக்கான தேவை அதிகரிக்க பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. இதனால் தாம் வசிப்பதற்கென வீடுகளை வாங்குபவர்கள்கூட அதிக விலைகளைக் கொடுத்து வீடுகளை வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் ஒரு வீட்டின் சராசரி விலை ஒரே மாதத்தில் பன்மடங்குகளால் அதிகரிக்க நேரிடுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலாப வரி அவரது வருமானத்துக்கேற்ப அதிகரிப்பதால் இவ்வித நடைமுறையைக் கட்டுப்படுத்தலாம் என அரசு நம்புகிறது.

இச்சட்டம் இரண்டு தரப்பினருக்கு விதிவிலக்களிக்கிறது. மேற்கூறியபடி 12 மாதங்களுக்குள் ஒருவர் வீட்டை வாங்கியபின்னர் அவரது கணவன் அல்லது மனைவி திடீரென் இறந்து போன காரணத்தால் அவ்வீடு விற்கப்படுமாயின் அதனால் கிடைக்கும் இலாபத்துக்கு மேலதிக வரி அறவிடப்படமாட்டாது. அதே வேளை இப்படியொரு வீட்டை வாங்கிய தம்பதிகள் மணவிலக்குப் பெறும் பட்சத்தில் அதனால் ஈட்டிய இலாபத்துக்கும் வரி அறவிடப்பட மாட்டாது.

பாவனை குறைந்த வீட்டு வரி (Underused Housing Tax (UHT)

கனடிய வதிவுரிமை பெறாத ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு வீட்டை வாங்கியபின்னார் எவரும் குடியேறாது அவ்வீடு வெறுமனே (vacant) இருந்தாலோ அல்லது அதன் பாவனை கணிசமான அளவு குறைவாக இருந்தாலோ (underused) அவ்வீட்டின் பெறுமதியின் 1 வீதத்தை அவ்வீட்டின் உரிமையாளர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்.

இச்சட்டத்துக்கும் சில விதிவிலக்குகள் உண்டு. ஒன்று: இவ் வீடு ஒரு பருவகாலப் பாவனைக்குரியதாக (seasonal use) இருந்தாலோ இரண்டு: இவ்வீடு இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதன் சொந்தக்காரர் இவ்வரியைச் செலுத்தத் தேவையில்லை.

டிசம்பர் 31, 2022 வரை வெறுமனாகவோ அல்லது பாவனை குறைந்ததாகவோ இருக்கும் வீட்டின் சொந்தக்காரர் ஏப்ரல் 30, 2023 இற்குள் இவ்வரியைச் செலுத்த வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் இவ்வரி அதிகரிக்கப்படலாமென்வும் கூறப்படுகிறது.

வருமான வரி அதிகரிப்பு

கனடாவில் ஒருவரது வருமான வரியைத் தீர்மானிக்கப் பல படிமுறைகள் உண்டு. உதாரணத்திற்கு 2021 இல் ஒருவரது வருட வருமானம் $49,020 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் அவர் தனது வருமானத்தின் 15% த்தை வரியாக அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். இவ்வருமானத்தின் தொகை இரண்டு மடங்கு ஆகும்வரை 26% வருமான வரியைச் செலுத்த வேண்டும். இப்ப்டி மேலும் பல அடுக்குகள் உண்டு. அதே வேளை நாட்டின் பணவீக்கத்தைப் பொறுத்து (inflaton) இப்படிகளை மாற்றுவதற்கு (indexing) அரசாங்கத்திற்கு அதிகாரமுண்டு. இதன் பிரகாரம் இவ்வருட வருமானவரிச் சலுகை 6.3% த்தால் அதிகரிக்கும் என வருமான வரித் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இம் மாற்றம் கடந்த 40 வருடங்களில் ஏற்பட்ட மொத்த மாற்றத்திற்குச் சமமானது என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த வருடத்துக்கான அடிப்படை வருமானவரிக் கழிவு $14,398 (2022) இலிருந்து $15,000 ஆக திகரிக்கும்.

முதல் வீட்டிற்கான சேமிப்புத் திட்டம் (First Home Savings Account (FHSA)

முதலாவதாக வீடொன்றை வாங்க விரும்பும் ஒருவர் அதற்காக வருடமொன்றுக்கு $8,000 மூலம் 5 வருடங்களில் $40,000 டாலர்களைச் சேமிக்க முடியும். இச் சேமிப்புத் தொகையை ($8000) அவ்வருட வருமானவரிக் கழிவாகப் பாவிக்க முடியும். அதாவது உங்கள் மொத்த வருமானத்தில் அடிப்படைக் கழிவான $15,000 த்துடன் மேலும் $8,000 ஐச் சேர்த்து வரும் கழிவை விட்ட மீதியான வருமானத்துக்கே நீங்கள் வருமானவரியைச் செலுத்த வேண்டும் (சலுகை). இப்படிச் சேமித்த $40,000 டாலர்களை நீங்கள் வீடு வாங்குவதற்குப் பாவித்தால் அதை அந்த வருடத்தின் வருமானமாகக் காட்டத் தேவையில்லை (சலுகை).

இச் சேமிப்பு வரிச்சலுகை ‘முதல் தடவையாக’ வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டுமானதில்லை. ஒருவர் கடந்த நான்கு வருடங்களாக சொந்த வீடொன்றுக்கு உரிமையாளராக இல்லாதிருந்தாலும் அவரும் இச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வீடு திருத்துவதற்கான வரிச் சலுகை (Multigenerational Home Renovation Tax Credit)

ஒருவரது வீட்டில் முதியவர் ஒருவரோ அல்லது இயக்கம் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தாலோ அவர்களுக்கான சிறப்பு வசதிகளை அவ்வீட்டில் செய்து கொடுப்பதற்கான வீடு புனரமைப்பைச் செய்வதற்கான செலவைக் கவனிக்க ஏதுவாக $7,500 வரையிலான வரிச்சலுகையை அரசாங்கம் வழங்குகிறது. இதன் மூலம் அம்முதியவருக்கு ஒரு மேலதிக அறையையோ அல்லது பாவனை வசதிகளையோ நிர்மாணித்துக் கொள்ளலாம்.

இரண்டாம் குடியிருப்பு வரிச்சலுகை (Secondary Housing Suite Tax Credit)

ஒருவரது வீட்டின் நிலக்கீழ் அறையிலோ அல்லது மொட்டை மாடியிலோ அல்லது வீட்டின் பின்னாலுள்ள சட்டபூர்வமாகப் பாவிக்கக்கூடிய மிதமிஞ்சிய நிலத்திலோ இன்னுமொரு குடியிருப்பை நிர்மாணிப்பதற்கான செலவின் 15 வீதத்தை -அதிகப்படியாக $50,000) வரிச்சலுகையாகப் பாவித்துக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு கனடிய வருமானவரித் திணைக்களச் செய்திகளைப் பார்க்கவும். Image Credit:Photo by Markus Winkler on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *