Tax

வெளிநாட்டு வீட்டுரிமையாளர்களின் ஆதன வரி விவகாரம்: வாடகைக் குடியிருப்பாளரிடம் வரி அறவிடப்படமாட்டாது – அமைச்சர்

கனடாவில் வீடுகளை வைத்திருக்கும் வீட்டுச் சொந்தக்காரர்கள் உரிய நேரத்தில் ஆதனவரியைச் செலுத்தத் தவறினால் அவ்வீடுகளில் வாடகைக்குக் குடியிருக்கும் வாடகை இறுப்பாளர்கள் இவ்வரியைச் செலுத்தவேண்டும் என சமீபத்தில் குளோபல் மெயில் பத்திரிகைச் செய்தி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் வருமானவரித் திணைக்களத்தின் இம்முடிவு தவறு எனவும் அது இனிமேல் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனவும் கனடாவின் தேசிய வருமான அமைச்சர் மொறீ-குளோட் பீபோ தனது ருவிட்டர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

வீட்டுச் சொந்தக்காரர் ஒருவர் தனது வீட்டிற்கான வருடாந்த ஆதன வரியைச் செலுத்தத் தவறியிருந்தால் அவ்வீட்டில் குடியிருக்கும் வாடகைக் குடியிருப்பாளர் தனது வாடகையின் 25% த்தைப் பிடித்து வைத்து அதை வருமானவரித் திணைக்களத்திற்கு அவர் அனுப்பிவைக்க வேண்டுமென அத் திணைக்களம் கட்டளையிட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரை பலத்த எதிர்ப்புத் தெரிவித்தமையின் பிரகாரம் வருமான வரித் திணைக்களம் இம்முடிவை மீளப்பெற்றுள்ளது. இதே வேளை வருமானவரித் திணைக்களத்தின் இவ்வறிவிப்பு தொடர்பாக அத்திணைக்களத்தின் மீது விசாரணைகளை ஆரம்பிக்கும்படி கந்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொன்றியல் நகரைச் சேர்ந்த வாடகைக் குடியிருப்பாளர் ஒருவரது வெளிநாட்டுச் சொந்தக்காரர் தொடர்ச்சியாக 6 வருடங்களுக்கு ஆதன வரி கட்டாமையால் அவ்வரி முழுவதையும் வாடகைக் குடியிருப்பாளரே கட்டவேண்டுமென வருமானவரித் திணைக்களம் கட்டளையிட்டிருந்தது. இது முறையற்றது எனக்கூறி அவர் வருமானவரித் திணைக்கள்ம் மீது வழக்குப் பதிந்திருந்தார். இருப்பினும் இவ்விடயத்தில் வருமானவரித் திணைக்களம் எடுத்த முடிவு சரியே என வருமானவரி நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து ‘குளோப் அண்ட் மெயில்’ பத்திரிகை மூலம் வெளியிடப்பட்ட இச்செய்தியால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தோன்றியிருந்தது.

“இப்படியான சட்டம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிறதென்றாலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு தடவையேனும் வாடகைக் குடியிருப்பாளர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படவில்லை” என வருமானத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனாலும் வாடகை குடியிருப்பாளருக்கும் வீட்டுச் சொந்தக்காரருக்குமிடையில் வியாபாரத் தொடர்பு ஏதும் இருப்பதாக வருமான வரித் திணைக்களம் அறியும் பட்சத்தில் அவ்வாடகைக் குடியிருப்பாளரிடம் வரியை அறவிட வருமானவரித் திணைக்களத்திற்கு சட்ட உரிமை இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *