Politics

2025 கனடிய மத்திய அரசுக்கான தேர்தல்: ட்றூடோ பதவி விலகலாம்?

சிவதாசன்

2025 ட்றூடோவின் லிபரல் கட்சிக்கு மிகவும் போதாத காலமாக இருக்குமென பட்சி சொல்கிறது. சமீபத்தில் கனடிய கருத்துக் கணிப்பு நிறுவனமான நனோஸ் செய்த ஆய்வின்படி இதுவரை 10 லிபரல் கட்சி உறுப்பினர்கள் தாம் அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள். மேலும் பலர் அமிழும் தோணியிலிருந்து தப்பி ஓடுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் உயரே ஏறுவதற்கான பாதைகள் மூடப்பட்டமை காரணம் எனவும் சிலர் பிரத்தியேக காரணங்களினால் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது.

இதர கட்சிகளிலும் சிலர் ஓய்வு பெறுகிறார்கள். காரணம் தொகுதிகளில் அவர்களது ஆதரவு குறைவதாலோ அல்லது அவர்களை வீழ்த்தக்கூடிய புதிய வீரர்கள் முன்தள்ளப்படுவதாலோவாக இருக்கலாம். இவ்வுறுப்பினர்கள் தப்பியோடுவதற்கு நிச்சயம் ‘சம்பளப் போதாமை’ காரணமல்ல. அல்லது வேர்க்க விறு விறுக்க வேலை செய்ததனால் ஏற்பட்ட களைப்பும் காரணமல்ல. இவர்களில் அநேகமானவர்கள் தாம் தேர்தலில் வெல்வதற்காக தமது தொகுதிகளின் குறைபாடுகளையும், தமது ஆதரவாளர் எதிர்கொள்ளும் இன்னல்களையும் முன்வைத்து வாக்காளர்களைக் கொதிநிலைக்குக் கொண்டுவந்து வாக்குப்பெட்டிகளை நிரப்புவதற்கான வழிவகைகளைத் தெரிந்துவைத்திருப்பவர்கள். ஓரிருவர் மட்டுமே ‘தள்ளு வண்டி’ வகையினர்.

கனடாவில் ஒரு பா.உ. வின் அடிப்படைச் சம்பளம் $194,600. மேலதிகமாக தொகுதி அலுவலகத்திற்கென $363,600; பிரத்தியேக, பாராளுமன்ற போக்குவரத்திற்கான கொடுப்பனவு; சாப்பட்டுக்கான கொடுப்பனவு ($30,690); ஒட்டாவாவில் தற்காலிகமாகத் தங்கும் ‘சின்ன வீட்டிற்கென’ $28,600. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒருவர் ஓடுகிறார் என்றால் காரணம் ஒன்றுதான். இவர்களில் அநேகர் தாம் அடுத்த தடவை தேர்தலில் வெற்றிகொள்ளப் போவதில்லை; “ஏன் மினக்கெடுவான்” என யோசித்திருக்கலாம்.

“அப்ப ஒரு மந்திரி எவ்வளவு எடுப்பார்” என்று கேட்க உங்கள் நாக்குகள் துடிக்கின்றன என்பது விளங்குகிறது. சோழியர் குடும்பிகள் சும்மா ஆடாது. சரி இந்தா பிடியுங்கள்:

2021 இல் கனடாவில் பிரதமர் ட்றூடோ 38 அமைச்சர்களை நியமித்தார். ஒரு அமைச்சரின் அடிப்படைச் சம்பளம் $274,500. ஏனைய கொடுப்பனவுகள் இங்கு தரப்படவில்லை. பிரதமரின் சம்பளம் $371,000. இதைவிட கோவிட் தாண்டவத்தின் பாதிப்பு காரணமாக பிரதி வருடமும் (2019, 2020) தலா $5,000 சம்பள உயர்வு. (இது ஒரு CERB கொடுப்பனவு என எண்ணிவிட வேண்டாம்)

லிபரல் கட்சியின் ஆட்சியில் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை. கோவிட் குரங்கு எறிந்த சாவியை (monkey wrench) அரசாங்கம் தவறாகப் பாவித்தமையால் பல நட்டுகள் லூசாகிவிட்டன. மொத்தமாக இயந்திரமே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. உதிரிப்பாகங்கள் சில தாமாகவே கழன்று விழுகின்றன. பிரதான உறுப்பான தலையும் படு வேகமாக ஆடத்தொடங்கியிருக்கிறது. 2025 இற்கு முன் அது உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு.

சென்ற தடவைகள் ட்றூடோவிற்கென விழுந்த பல வாக்குகளில் மிதந்து கரை சேர்ந்தவர்கள் பலர். என்ன சொன்னாலும் கண்ணனின் கவர்ச்சியில் காரிகைகளும், இளையவர்களும் இருக்கைகளை விட்டெழுந்து சென்று வாக்களித்திருந்தார்கள். மறுபுறத்தில் மாத்திக்கட்டிய கன்சர்வேட்டி(வ்)களின் அழுக்குகள் தெரியவாரம்பித்தமையும் கண்ணனுக்கு உதவியாகவிருந்தது. இப்போது காரிகைகள் கண்ணனின் நந்தவனத்திலிருது ஓட்டம் பிடிக்கிறார்கள் என்கிறது நனோஸ்.

லிபரல் கட்சி வெறும் கூச்சல்களுக்கு செயலாற்றியமை (reacting to noise) அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். சிரியா அகதிகள் பின்னர் யூக்கிரெய்ன் அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள் வருகை, தற்காலிக பணியாளர்கள் அனுமதி, தற்காலிக குடிவரவாளர் அனுமதி எனக் குறுகிய காலத்தில் அதிகமான அகதிகளையும் குடிவரவாளர்களையும் கனடாவிற்குள் அனுமதித்தமையே வீட்டு விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனப் பலர் நம்புகிறார்கள். வீடு வாடகை அதிகரிப்பினால் பண ஆசை பிடித்து பலர் வீடுகளை அதிக விலை கொடுத்து வாங்கியமையும், வெளிநாட்டாரின் முதலீடுகளும் இந்த வீட்டு விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனப்படுகிறது. இந்த வேளையில் கடன் வட்டி வீதத்தை அதிகரிக்க முடியாது கோவிட் தனது தடையை விதித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அனுபவமற்ற அமைச்சர்களைப் பொறுப்பான பதவிகளில் நியமித்து கண்ணன் எல்லாவற்றையும் குழப்பிவிட்டார்.

இவ்வேளையில் சாதகத்தில் அவரது எதிரியின் இடத்தில் வந்தமர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியெவ் வாய் மூடி மெளனியாக இருந்தே பல காரியங்களை எளிதாகச் சமாளித்துவிட்டார். தலைவராக வந்ததிலிருந்து அவரில் ஒரே ஒரு மாற்றமே ஏறேபட்டுள்ளது. அவர் இப்போ கண்ணாடி அணிவதில்லை. இதனால் அவர் ‘கண்ணனாக’ ஆகமுடியாது எனினும் அவர் தனக்கான பிரச்சாரத்தைக் கண்ணனே செய்துகொள்வார் என விட்டுவிட்டார். கண்ணனும் அதைச் செவ்வனே செய்துவருகிறார்.

2015 தேர்தலில் மொத்தம் 142 உறுப்பினர்கள் முதன் முதலாகப் பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்தனர். இவர்கள் இப்போது ஓய்வூதியம் எடுப்பதற்குத் தகுதியானவர்களாகிறார்கள். தொடர்ந்து 6 வருடங்கள் சேவை புரிந்தவர்கள் 65 வயதில் முழுமையான ஓய்வூதியத்தைப் பெற முடியும். 65 வயதிற்கு முன்னர் ஓய்வு பெறுபவர்களின் ஓய்வூதியம் வருடமொன்றுக்கு 1% த்தால் குறைக்கப்படும். எப்படிப் பார்த்தாலும் அவர்கள் புண்ணியவான்கள்.

தற்போது லிபரல் கட்சி அமைத்திருக்கும் அரசு ஒரு சிறுபான்மை அரசு. இது நிற்பதற்கும் நடப்பதற்கும் முண்டு கொடுத்து வருவது புதிய ஜனநாயகக் கட்சி. அதன் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் நிலையில் அடுத்த தடவை கன்சர்வேட்டிவ் கட்சி சிறுபான்மை அரசை உருவாக்கத் தேவையிருக்காது. பொதுவாக ஒரு சிறுபான்மை அரசு 18 முதல் 24 மாதங்களுக்குள் வீழ்த்தப்பட்டு விடுவது மரபு. லிபரல் அரசு அதை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டது. அதற்கு முண்டு கொடுத்தமைக்காக புதிய ஜனநாயகக் கட்சியும் தனது வெகுமதியாக வறுமைப்பட்ட மக்களுக்கான பற்சிகிச்சைக் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அது தனது பிறவிப் பயனை எய்திவிட்டது. இனி அக்கட்சியும் ஓய்வுபெறலாம்.

அடுத்த தேர்தல் அக்டோபர் 25, 2025 இல் நடைபெறவிருக்கிறது. கனடாவின் பெருநகரப் பகுதிகளில் லிபரல் கட்சிக்கு ஆதரவிருப்பினும் அதற்கு எப்போதும் பக்க பலமாகவிருந்த இரு பகுதியினர் – ஒன்று ‘இளையோர்’ (40 வதுக்குட்பட்டோர்) மற்றது பெண்கள் – இப்போது லிபரல் கட்சியிலிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். அவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பினும் அதுவே எதிர்க்கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும்.

உலகம் முழுவதும் இப்போது வலதுசாரிகளின் மீளெழுச்சிகளைக் கண்டுவருகிறது. இடதுசாரிகளின் பிறப்பிடங்களாகிய சீனாவும் ரஸ்யாவும் தம்மை வலதுபக்கத்துக்கு நகர்த்திக்கொண்டுவிட்டன. நகராட்சிகளின் சட்டங்கள் பல தொழிற்சங்கங்களின் தேவைகளை இல்லாது செய்துவிட்டன. எனவே இடதுசாரீயத்தைச் சுமக்க இப்போது ஆட்கள் போதாது. இதனால் உலகம் பழமைவாதத்தை நோக்கி தீவிரமாக அசைந்துகொண்டிருக்கிறது. எனவே கனடாவில் அடுத்த ஆட்சியைக் கன்சர்வேட்டிவ் கட்சியே அமைக்கும்.

லிபரல் கட்சியின் பல உறுப்பினர்கள் தமது தலைவரில் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 2024 நடுப்பகுதியில் ட்றூடோ பத்வி விலகினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. பெப்ரவரி-ஏப்ரல் மாத காலத்தில் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம். இதற்கு முன்னரே ட்றூடோ பதஹ்வி விலும் சாத்தியம் இருப்பதாக உட்கட்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாக நனோஸ் தெரிவித்திருக்கிறது.

என்.டி.பி.கட்சியிலும் நிலைமை இதுதான். பல அனுபவமுள்ள பா.உ. க்கள் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது. (Image Courtesy: The Hill Times)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *