G7 2025: இந்திய பரிவாரம் அழைக்கப்படக்கூடாது – சீக்கியர் கூட்டமைப்பு
அடுத்த மாதம் கனடாவில் நடைபெறவிருக்கும் G7 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கனடிய அரசு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கண்டிப்பதுடன் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை தொடர்பில் நடைபெறும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவது முதல் நிரூபிக்ககூடிய வகையிலான சீர்திருத்தங்களை அறிவிக்கும்வரை இந்திய அரசின் பிரதிநிதிகளைக் கனடா வர அனுமதிக்கக்கூடாது எனக்கோரி சீக்கியர் கூட்டமைப்பு – கனடா கனடிய அரசியல்வாதிகளுக்கு அறிக்கைகளை அனுப்பி வருகிறது.
கனடாவின் இறைமையையும் அடிப்படை விழுமியங்களையும் மீறி பொருளாதாரத் தேவைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் சமீபத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்திருந்த கருத்துக்கள் இந்திய அரசின் முகவர்களால் கனடாவிலுள்ள சீக்கிய சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மற்றும் பொய்ப்பிரசாரங்கள் ஆகியவற்றை உதாசீனம் செய்வதாக அமைகின்றன என கனடாவின் சீக்கியர் கூட்டமைப்பின் தேசிய பேச்சாளர் பாய் மொஹிந்தர் சிங் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், கனடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உடபட் 40 பேருடன், கட்சி பேதம் பாராது, கனடிய சீக்கியர் கூட்டமைப்பு தொடர்புகொண்டுள்ளது. இது தொடர்பாக இதர சீக்கிய அமைப்புக்களும் சமூகத் தலைவர்களும் தத்தம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும்படியும் சீக்கியர் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.
இவ்விடயம் தொடர்பாக கனடிய சீக்கியர் கூட்டமைப்பு ‘வீடு’ இணையத்தளத்திற்கு அனுப்பிவைத்த அறிவித்தல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.



