Health

ஒன்ராறியோ: சுகவீன விடுமுறைக்கு இனிமேல் மருத்துவரது சான்றிதழ் தேவையில்லை – மாகாண அரசு அறிவிப்பு

மருத்துவர்களின் வேலைப் பளுவைக் குறைப்பதற்காக சுகவீனம் காரணமாக வேலைக்குப் போக முடியாத பணியாளர்களிடம் மருத்துவ சான்றிதழ்களைத் தரும்படி பணி நிறுவனங்கள் கோரிக்கை வைக்கமுடியாது என ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் பணியாளர்கள் சுகவீனமுற்றதென்பதற்கான ஆதாரங்களை கேட்கும் உரிமை நிறுவனங்களுக்குத் தொடர்ந்தும் இருக்கும். சுயமான ஆதாரங்கள் அல்லது மருந்தகங்களில் மருந்துகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் போன்றவை நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கதலீன் வின் தலைமையிலான மாகாண அரசு ஜனவரி 1, 2028 முதல் பணி நிறுவனங்கள் பணியாளரிடமிருந்து மருத்துவ சான்றிதழைக் கோரமுடியாது நடைமுறைப்படுத்திய சட்டத்தை டக் ஃபோர்ட் அரசு பதவியேற்றதும் மீளப்பெற்றிருந்தது என்பது நினைகூரத்தக்கது.

மருத்துவ சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியில் முதன்மை வைத்தியர்கள் ஈடுபடுவதைவிட அதிகம் நோயாளிகளைப் பராமரிப்பதில் அவர்கள் நேரத்தை செலவிடலாம் என மாகாண அரசு நம்புகிறது என மாகாண சுகாதார அமைச்சர் சில்விய ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நோயாளிகள் மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்களுக்கிடையேயான உரையாடல்களை எழுத்தில் மாற்றிப் பதிந்துகொள்வதற்காக செயற்கை விவேகத்தைப் பாவிக்க முடியுமா என ஆராய்வதற்காக ஒரு ஆரம்ப பரிசீலனைத் திட்டமொன்றையும் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஒன்ராறியோ மருத்துவர் சங்கத்தின் உப அமைப்பான ‘ஒன்ராறியோ எம்டி’ என்னும் அமைப்பு இப்பரிசோதனைக்கென 150 முதன்மை மருத்துவ நிலையங்களைத் தெரிந்தெடுத்துள்ளது. ‘ஸ்க்றைப்’ என அழைக்கப்படும் இந்த செயற்கை விவேக மென்பொருள் மருத்துவ-நோயாளி உரையாடல்களைக் கேட்டு சுருக்கமாக எழுத்தில் தரும் ஆற்றலைக் கொண்டது எனக்கூறப்படுகிறது. தற்போது இவ்வுரையாடல்களை மருத்துவரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட இன்னுமொருவரோ கணனியில் பதிவேற்றுகின்றனர். இதனால் மருத்துவர்களுடைய நேரம் வீணடிக்கப்படுகிறது. இப்பரிசோதனை முயற்சி வெற்றியளிப்பின் நோயாளிகளின் சம்மதத்துடன் இவை அவரவர்களின் மருத்துவக் குறிப்புகளில் (Electronic Medical Records) சேர்க்கப்படும். இதன் மூலம் அலுவலகம் மூடிய பின்னர் மருத்துவர்கள் மேற்கொள்ளும் பதிவு வேலைகளில் 50% மானவற்றை குறைத்துக்கொள்ள முடியுமென அரசு நம்புகிறது. தற்போது வாரமொன்றுக்கு 19 மணித்தியாலங்களை முதன்மை மருத்துவர் இதர வேலைகளுக்காகச் செலவிடவேண்டியுள்ளது எனவும் இதற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் ஒன்ராறியோ மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் அண்ட்றூ பார்க் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது முதன்மை மருத்துவர்களிடமிருந்து சிறப்பு மருத்துவர்கள், ஆய்வுகூடங்கள் போன்றவைக்கு எழுதப்படும் சிபார்சுகளையும் எண்ணிமப் படுத்துவதுடன் (digitize) மின் படிவங்கள் மூலம் தகவற் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் திட்டமும் உள்ளதென அமைச்சர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடதாசிகள் மூலம் தகவல் பரிமாறும் முறைகளைக் குறைக்கவோ அல்லது ஒழிக்கவோ முடியுமென அரசு கருதுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ஒன்ராறியோ மாகாணத்தில் 2.3 மில்லியன் மக்கள் குடும்ப வைத்தியரில்லாமல் அவதிப்படுகிறார்கள் எனவும் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் இது இரட்டிப்பாகுமெனத் தாம் நம்புவதாகவும் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக மருத்துவக் கல்லூரிகளிலுருந்து பட்டம்பெற்று வரும் மாணவர்களில் பலர் குடும்ப வைத்தியத் துறையை நாடுகிறார்களில்லை என மருத்துவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. Photo by Abby Anaday on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *