Health

ஒன்ராறியோ: பயணக் காப்புறுதி எச்சரிக்கை!

அகத்தியன்

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஒன்ராறியோ வாசியின் அனுபவம் பயணிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டுமென்பதற்காக இச்செய்தி இங்கே பகிரப்படுகிறது.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் ஒன்ராறியோ வாசிகள் பெரும்பாலும் தமது விமானப் பயணச் சீட்டுகளை கடன் அட்டையில் வாங்கும்போது அதன் மூலம் காப்புறுதியும் கூடவே கிடைக்கிறது என நம்புகிறார்கள். சிலர் மேலதிகமாகப் பணத்தைச் செலவழித்து உரிய காப்புறுதியை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார்கள். பயணத்தில் சிக்கல்களோ, விபத்துகளோ அல்லது உடலில் எதிர்பாராத நோய்களோ வராதவரை எல்லாம் சுகமாக முடிந்துவிடும். ஆனால் திடீர் சுகவீனம் என்று ஏதாவது ஏற்பட்டுவிட்டால் பயணம் செய்யும் வெளிநாட்டில் ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகளைக் கவனிக்கும் அளவுக்கு காப்புறுதி (coverage) போதுமானதாக இருக்குமா என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

றிச்சார்ட் பிஷப் என்ற ஒன்ராறியோ வாசி சமீபத்தில் தனது மனைவியுடன் ஃபுளோறிடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலாவை இனிதே முடித்துக்கொண்டு இத் தம்பதிகள் கனடா திரும்பும் வழியில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு இருதயக் கோளாறு பிடித்துக்கொண்டது. பல முதலுதவிச் சிகிச்சைகளைத் தொடர்ந்து ஃபுளோறிடாவிலுள்ள மருத்துவ மனையொன்றில் பிஷப் அனுமதிக்கப்பட்டார். இத் தம்பதிகள் அமெரிக்கா செல்வதற்கு முன்னராகவே இருவரும் தமக்கான பயணக் காப்புறுதியைச் செய்திருந்தபடியால் மருத்துவ மனைச் செலவுகள் பற்றி அவர்கள் கவலை எதுவும் படவில்லை. பிஷப்பின் மருத்துவ மனைச் செலவு $620,011 டாலர்கள் எனவும் அதைக் குறிப்பிட்ட காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்கும் எனவும் அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. சில காரணங்களைக் காட்டி காப்புறுதி நிறுவனம் இத்தொகையை மருத்துவமனைக்கு வழங்க மறுத்துவிட்டது. இப்போது அவர்கள் தமது சொந்தப்பணத்திலிருந்து மருத்துவ மனையின் கணக்கைத் தீர்க்க வேண்டியதாகிவிட்டது.

காப்புறுதி நிறுவனம் பிஷப்பின் மருத்துவ மனைச் செலவை நிராகரித்ததற்குக் காரணம்? “பிஷப் பயணம் செய்யுமளவுக்கு ஸ்திரமான உடல் நிலையில் இருக்கவில்லை” என்பதே காப்புறுதி நிறுவனத்தின் மறுப்பிற்குக் காரணம்.

“எனக்கு 73 வயது. பத்து விலா எலும்புகளை முறித்து 14 நிமிடங்களுக்குப் பிறகு எனது இருதயத்தை மீளவும் இயங்கச் செய்திருக்கிறார்கள். நான் உயிர் தப்பி விட்டேன்” என மகிழ்ச்சியோடு பிஷப் கூறினாலும் அவரது மனைவி அலினாவுக்கு இந்த $610,000 ஒரு பெரும் சுமையாக இருக்கிறது.

காப்புறுதி கேள்விக்கொத்தின் பிரகாரம் அவர்களது பயணத்தை அக் காப்புறுதி உறுதிசெய்திருந்தது. பிஷப்பின் இருதய சிகிச்சை நிபுணர், குடும்ப மருத்துவர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர மருத்துவர்கள் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை அலினா முற்கூட்டியே காப்புறுதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார். அப்படியிருந்தும் காப்புறுதி நிறுவனம் அவரது கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. காரணம்? பிஷப் ஏற்கெனவே இருதய வியாதியால் பீடிக்கப்பட்டவர் (preexisting condition) என்பதனாலேயே. “பயணம் செய்யும் நிலையில் பிஷப் இருக்கவில்லை” என்பதே காப்புறுதி நிறுவனத்தின் வாதம்.

பிஷப் தம்பதிகளுக்கு மட்டுமல்ல பயணக் காப்புறுதி பற்றிய தெளிவின்மை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதற்கு காரணம் பல காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களும் பத்திரங்களில் கையெழுத்து வைப்பவர்களும் சிற்றெழுத்துப் பந்திகளை வாசித்து புரிந்து கொள்வதில்லை. அதற்கான நேரத்தையும் ஒதுக்குவதில்லை. இதுபற்றி ஒரு முகவர் கருத்துச் சொன்னபோது “குறிப்பிட்ட பயணி எடுக்கும் மருந்துகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது மருத்துவ பரிசோதனைக்கான திகதி நிச்சயிக்கப்பட்டிருந்தாலோஅவற்றைக் காரணம் காட்டி காப்புறுதி வழங்குதலை நிறுவனம் நிராகரிக்க முடியும்” எனக் கூறினார்.

இதே வேளை காப்புறுதி நிறுவனங்களால் கொடுப்பனவு மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவ மனையுடன் பேசி மருத்துவச் செலவை மிகவும் கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும் என மேற்குறிப்பிட்ட முகவர் தெரிவித்தார்.

உங்களில் யாராவது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் உத்தேசம் இருந்தால் உங்கள் காப்புறுதி முகவருடந் இதுபற்றிக் கலந்தாலோசித்து விபரங்களை அறிந்துகொண்டு புறப்படுங்கள். Photo by Suhyeon Choi on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *