Auto

ஒன்ராறியோ: வாகன உச்சவேகம் 110 கி.மீ ஆக அதிகரிக்கிறது

வேக ஓட்டக்காரருக்கு ஒரு நற்செய்தி! ஒன்ர்தாறியோ மாகாணத்தில், இந்த வெள்ளி (12) முதல் சில நெடுஞ்சாலைகளில் வேக எல்லை 100 கி.மீ. இலிருந்து 110 கி.மீ. ஆக உயர்த்தப்படவிருக்கிறது. அதற்காக 401 நெடுஞ்சாலை முழுவதும் உங்கள் வேக ஓட்டத்திற்குத் திறந்து விடப்பட்டுவிட்டது என்று எண்ண வேண்டாம்.

ஒன்ராறியோ மாகாணத்தின் இத் திட்டத்தின் பிரகாரம் மாகாணக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சில நெடுஞ்சாலைகளின் 10 பிரிவுகள் மட்டுமே இவ்வேக அதிகரிப்புக்குள் அடங்கும். 401 நெடுஞ்சாலையில் கோல்போர்ணிலிருந்து பெல்வில் மட்டுமான பிரிவு, பெல்வில் முதல் கிங்ஸ்டன் மட்டுமான பிரிவு, 403 நெடுஞ்சாலையில் வூட்ஸ்டொக் முதல் பிரான்ஃபோர்ட் வரை மற்றும் பிரான்ஃபோர்ட் முதல் ஹமில்டன் வரையான பிரிவுகள் இவ்வேக அதிகரிப்புக்கு இலக்காகின்றன.

இவ் வேக அதிகரிப்பு ஒன்ராறியோ மாகாணத்திற்குப் புதிதானதல்ல. 2022 இல் தென் ஒன்ராறியோவில் 6 பிரிவுகளும் வட ஒன்ராறியோவில் இரண்டு பிரிவுகளும் பரீட்சார்த்த வேக அதிகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அதே போல இன்னும் பல பிரிவுகள் இவ்வருடப் பிற்பகுதியில் வேக அதிகரிப்பிற்கு உள்ளாகும்.

“அநேகமான ஒன்ராறியோ நெடுஞ்சாலைகள் 110 கி.மீ. வேகத்திற்குத் தாக்குப்பிடிக்ககூடியவையாகவே வடிவமைக்கப்பட்டிருந்தன. 2022 வேக அதிகரிப்பு இதை உறுதிப்படுத்தியிருக்கிறது” என கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மாகாண போக்குவரத்து அமைச்சர் பிரப்மீட் சர்க்காரியா கூரியிருந்தார். இதர மாகாணங்களில் இந்நடைமுறை ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமையை ஆதாரம் காட்டி ஒன்ராறியோ மாகாணமும் வேக அதிகரிப்பை நடைமுறைப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். (Image Courtesy: Ontario Trucking Assn)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *