Real Estateசட்டம்

ஒன்ராறியோ: வீட்டுச் சொந்தக்காரர்களுக்கோர் நற்செய்தி!!!

நீண்ட காலத்திற்குப் பிறகு (?) ஒன்ராறியோ அரசாங்கம் வீட்டுச் சொந்தகாரருக்கு சிறியதொரு பரிசை வழங்க முன்வந்திருக்கிறது. இம்முன்மொழிவு சட்டமாக்கப்பட்டால் உங்கள் வீடுகளில் பொருத்தப்பட்ட எரி உலை (furnace), சுடுநீர்க் கலன் (water heater), குளீரூட்டி (central air) போன்ற வாடகைச் சாதனங்களுக்கென சில நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைகளிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

ஒன்ராறியோவில் பெரும்பாலான புதிய வீடுகளை வாங்குபவர்களும், பழைய வீடுகளில் கதவு தட்டி விற்பனை செய்பவர்களிடம் சாதனங்களை வாங்கியவர்களும் மாத முடிவில் எதிர்கொள்ளும் அதிர்ச்சி (sticker shock) மாதாந்த எரிவாயு, மின்சாரக் கட்டணங்களில் காணப்படும் சாதன வாடகை (equipment rental) போன்ற இன்னோரன்ன வகையறாக்கள் மீதானவையாக இருப்பதுண்டு. இதற்கு காரணம் புதுவீடுகளை வாங்கும்போது விற்பனை முகவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தாத அல்லது வீட்டுத் திறப்பை எடுக்க நீங்கள் காட்டும் அவசரத்தில் எந்தப்பத்திரத்தையும் வாசிக்காமல் அவசரம் அவசரமாகக் கையெழுத்துவிடுவதனால் கிடைக்கும் அனுபவம் தான்.

“இஞ்சேருங்கோப்பா, வாட்டர் பில் இவ்வளவு வந்திருக்கு. அப்பவும் நான் சொல்லிறனான் நீங்கள் கனநேரம் குளிக்கிறனீங்கள் எண்டு. இனிமேல் இரண்டு நாளைக்கு ஒருக்காக் குளிச்சாக் காணும்” என்று மனைவி ‘பில்லை’ கணவருக்குக் கொடுக்க அவர் ‘பில்லை’ ஆறுதலாகப் பார்த்துவிட்டு “உனக்கு விளங்கேல்லை. இதில தண்ணியை விட வாட்டர் ஹீற்றருக்குத் தான் கூட எடுத்திருக்கிறாங்கள்” என்று கோபம் தலைக்கேற “இப்ப பொறு எஜெண்டுக்கு எடுத்துக் கிழிக்கிறன்” என்று இன்னுமொரு பியரை எடுக்க ஃபிரிட்ஜிற்குப் போவது பல வீடுகளில் வழக்கம்.

இதற்குக் காரணம் வீடு விற்கும் நிறுவனங்கள் தமது வீடுகளில் பொருத்தும் சாதனங்களை பிற நிறுவனங்களிடம் மாத வாடகைக்கு அமர்த்துவதுடன் இணைப்புக் கட்டணம் (installation charge) அது இதுவென்று பல கட்டணங்களைக் கடைசி நேரத்தில் சேர்த்துவிடுவது. இதையெல்லாம் விலாவாரியாக விளங்கப்படுத்தினால் வீடு விற்கமுடியாது என்பதால் இந்த துன்ப அதிர்ச்சியை விற்பனை நிறுவனமும், விற்பனை முகவரும் சேர்ந்து சட்டத்தரணிகளின் தலையில் கட்டி விடுவது வழக்கம். ‘எழுத்துக்கூலி’ (closing costs) என்ற பெயரில் ஸ்ரேற்மெண்டின் கடைசியில் கேட்கப்பட்ட இப்பெருந்தொகை அநேகமாக எல்லோருக்குமே கொடுக்கும் sticker shock அதிர்ச்சி தருவது தான். ஆனாலும் ‘கீ எடுக்கும் ஆர்வத்தில்’ இதுவெல்லாம் அத்தருணத்தில் கண்களில் படுவது குறைவு. முதலாம் மாத ‘பில்’கள் வீடுவரும்போதுதான் கணவன் – மனைவி சண்டை ஆரம்பிக்கிறது.

இதில் பலர் கவனிக்காத பிரச்சினை என்னவென்றால் வீடுகளில் பொருத்தப்படும் சாதனங்களை வாடகைக்கு எடுக்காமல் அறுதியாக வாங்கக்கூடிய தேர்வை (outright purchase) இந்நிறுவனங்கள் வீட்டுச்சொந்தக்காரருக்கு வழங்குவதில்லை. ஏனெனில் சாதனங்களை வாடகைக்கு விடுவதால் அவர்களுக்கு இலாபம் அதிகம். ‘பிழை வந்தா அவங்களே ஃபிறீயா மாத்துவாங்கள்’ என்ற ஏஜண்ட் கூறும் அட்வைஸை தேவ வாக்காக எடுத்துக்கொண்டு கையெழுத்துடுவது நமக்குப் பழகிப்போன ஒன்று.

இங்கு விற்பனை முகவரோ அல்லது சட்டத்தரணியோ முறையாக விளங்கப்படுத்தத் தவறும் ஒரு விடயம் இச் சாதன வாடகையையைச் செலுத்துவதில் தாமதம் அல்லது மறுப்பு ஏற்படும் தருணத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் பற்றியது. இங்குதான் ஒன்ராறியோ மாகாண அரசின் புதிய சட்டம் வீட்டுச் சொந்தக்காரர்களைக் காப்பாற்ற ஓடி வருகிறது.

விடயம் இதுதான். உங்கள் ‘புதிய’ வீடுகளில் பொருத்தப்படும் சாதனங்கள் எதுவாயினும் அவற்றை நீங்கள் ‘வாடகைக்குப்’ பெற்றிருந்தால் அவ்வாடகையையோ அல்லது நிலுவையையோ செலுத்தும் பொறுப்பு உங்களிடமிருந்து உங்கள் வீட்டிற்கு மாறிவிடுகிறது (பெரும்பாலும்). இப்பதிவை Notices of Security Interest on Land Titles (NOSIs) என அழைக்கிறார்கள். அதாவது இந்நிலுவைப் பணம் உங்கள் பெயரிலிருந்து வீட்டின் உறுதி மீது பதியப்பட்டுவிடும். இதனால் நீங்கள் ‘வங்கிரோத்து அடித்தாலும்’ வீட்டின் பேரில் எழுதப்பட்டதால் (registered on title) வாடகை நிறுவனத்தின் பணம் பாதுகாக்கப்படுகிறது. வீடு விற்கப்படும்போது வட்டியும் முதலுமாக அப்பணத்தைச் செலுத்திய பின்னரே வீட்டின் உறுதி மாற்றப்படலாமென்பது தற்போதைய விதி.

இதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் இவ்வாடகை நிறுவனங்கள் அறவிடும் கட்டணங்கள் தலைகளைச் சுத்துபவையாக இருப்பதே அரசாங்கத்தின் முறைப்பாடு. இதற்காகவே இப் புதிய சட்டமூலம் ( Homeowner Protection Act, 2024) அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது இனிமேல் இவ்வாடகை நிறுவனங்கள் தமது சாதனங்களை வீடுகளின் உறுதிகளில் (title) பதிய முடியாது. நிலுவையை ஒருவர் செலுத்த மறுக்கும் பட்சத்தில் அதை மீட்டெடுக்க அந்நிறுவனங்கள் நீதிமன்றம் அல்லது வேறு வழிவகைகளைக் கையாளவேண்டும். சாதனங்களை ‘கட்டுக் காசுக்கு’ அல்லது வாடகைக்குப் பெறும்போது கையெழுத்திடும் ஒப்பந்தங்களை இச்சட்டம் இலாமற் செய்துவிடப்போவதில்லை. எனவே எதோ ஒரு வகையில் அப்பணத்தைச் செலுதியே ஆகவேண்டும்.

அதே வேளை பழைய வீடுகளை வைத்திருக்கும் பல முதியோர் தமது இல்லங்களுக்கு வந்து கதவைத் தட்டி சாதனங்களை விற்கும் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் அரசாங்கத்தின் இச்சட்டமூல அறிவிப்பிற்கு ஒரு முக்கிய காரணம். ஓய்வூதியத்தில் வாழும் பலர் மாதக் கட்டுப்பணத்திற்கு புதிய சாதனம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் ஒப்பந்தங்களை முழுமையாக வாசிக்காமல் கையெழுத்து வைத்துவிடுகின்றனர். ஆனால் வீட்டின் உறுதி மேல் இது பதியப்படுகிறது என்பதையோ இக்கட்டணம் செலுத்தப்படாத போது வீட்டிற்கு என்ன நடக்கப்போகிறது என்பதையோ இம்முதியோருக்கு விளங்கபப்டுத்தப்படுவதில்லை. இதனால் இப்படியான உத்திகளைப் பாவித்து பல நிறுவனங்கள் வீடுகளைக் கையகப்படுத்தி விடுகின்றன. இப்படியான மோசடிக்காரர்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவே இச்சட்டம் என்கிறது ஒன்ராறியோ மாகாண அரசு. இபுதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பல்வேறு நன்மைகளும் கிடைக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிலொன்று:

தற்போதுள்ள சட்டத்தின்படி தனிவீடுகளை வாங்குபவர்கள் கட்டிட நிர்மாண நிறுவனங்களுடன் செய்யப்படும் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடியாது. தொடர்மாடிக் குடியிருப்புக்களை (condominiums) வாங்குபவர்களுக்கு இருக்கும் சலுகை போல் 10 நாட்களுக்குள் மனம் மாறி (cooling off period) ஒப்பந்தத்தை முறித்து வெளீயேற முடியாது. இச்சட்டத்தின் பிரகாரம் இச்சலுகை இனிமேல் தனிவீடுகளுக்கும் செல்லுபடியாகும். (Image Courtesy: Glendale Heating & Airconditioning)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *