Real Estate

கட்டுவதற்கு முன்பாக வீடுகளை (pre-construction) வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

வீடும் வீடுசார் விடயங்களும் – பாகம் 1

வீட்டுச் சந்தை மிகவும் சூடாக இருக்கும்போது பலர் புதிய வீடுகளை, அவற்றின் கட்டுமானம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வாங்குவதற்கு வீட்டு நிர்மாண நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்கிறார்கள். சந்தையில் வீடுகள் அதிகம் இல்லாதபோது பலர் முண்டியடித்துக்கொண்டு இரவு பகலாக வரிசையில் நின்று தமக்கு விருப்பமான வீடுகளை வாங்கிக் கொள்வது இயல்பு. இவர்களில் பெரும்பாலானோர் வானொலி விளம்பரங்களால் கவரப்பட்டும் விற்பனை முகவர்களின் வியாபார அழுத்தங்களுக்கு இலக்காகியும் உணர்ச்சிவசப்பட்டு முற்பணங்களைக் கட்டிவிடுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பங்கினர் தமது அவசர நடவடிக்கை குறித்து பின்னர் கவலைப்படுவதும் வழக்கம். இதனால் புதிய வீடுகளை வாங்குபவர்கள் முற்பணம் கட்டுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு தருகிறோம்.

ஒப்பந்தங்கள் (Contracts / Agreements of Purchase and Sale)

ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் தற்செயலாக ஒருவர் மனம் மாறுமிடத்து நட்டஈடு எதுவுமில்லாது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதே. தொடர்மாடிக் குடியிருப்புக்களை (condominium) வாங்குபவர்களுக்கு நிர்மாண நிறுவனம் சட்டப்படி 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கவேண்டும். தனி / இரட்டை/ நிரை வீடுகளை வாங்குபவர்களுக்கு இந்தச் சலுகை (இதுவரை) இல்லை. எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்ததும் அவ்வீட்டை வாங்கியே ஆகவேண்டும். சில நிர்மாண நிறுவனங்களில் முகவர்கள் தனிப்பட்ட ரீதியில் உதவிகளைச் செய்வதுமுண்டு. ஆனால் சட்டப்படி முற்பணம் கட்டப்பட்டவுடன் ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டுவிடும்.

அநேகமாக எல்லா ஒப்பந்தங்களும் சிறிய எழுத்துக்களிலான சட்ட சரத்துக்களை (clauses) கொண்டிருப்பது வழக்கம். சட்ட அறிவில்லாத சாதாரணமான ஒருவருக்கு இச்சரத்துக்களை வாசித்து புரிந்துகொள்வது சுலபமான ஒன்றல்ல. எனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முதல் அதன் பிரதி ஒன்றை வாங்கி உங்கள் சட்ட அறிஞருக்கு அனுப்பி அவரது அபிப்பிராயத்தைப் (legal opinion) பெற்றுக்கொண்ட பிறகு கையெழுத்திடுவது மிகவும் அவசியம்.

முற்பணத்துக்கான காப்புறுதி (Deposit Insurance)

முற்பணம் கட்டிய பின்னர் குறிக்கப்பட்ட திகதிக்குள் அவ்வீட்டைக் கட்டி முடித்துத் தருவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டதனாலோ அல்லது பொருள் நட்டத்தினாலோ நிர்மாண நிறுவனம் வீடு கட்டுவதை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் வாங்குபவர் கட்டிய முற்பணத்தின் ஒரு பகுதியைத் திருப்பித் தரவேண்டும். தனி / இரட்டை / நிரை வீடுகளை (freehold homes) வாங்குபவர்களுக்கு வாங்கும் விலையின் 10% வரை அதிக பட்சம் $100,000 நட்டஈட்டை நிறுவனம் வழங்கவேண்டும். தொடர்மாடிக் குடியிருப்புக்களுக்கு இது $20,000 மட்டுமே.

முடிவு திகதி நிர்ணயம் (Closing Date)

ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் முடிவு திகதியில் வீடுகள் கட்டி முடிக்கப்படாவிட்டால் தனி வீடுகளை வாங்குபவளின் விடயத்தில் நட்டஈடு எதுவுமில்லாமல் முடிவு திகதியைக் குறிப்ப்ட்ட நாட்களௌக்குப் பின்போட நிறுவனங்களுக்கு அனுமதியுண்டு. 120 நாட்களுக்கு இரண்டு தடவைகள் (மொத்தம் 240 நாட்கள்) இத்திகதியை நீடிக்க நிறுவனங்களுக்கு அனுமதியுண்டு. நிறுவனம் அதை மீறினால் அதிகபட்சம் $7,500 வரை வாங்குபவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கு நீங்கள் உடன்படாத பட்சத்தில் நீங்கள் கட்டிய முற்பணத்தை முழுமையாக் நிறுவனம் திருப்பித் தரவேண்டும். ஆனாலும் இயற்கையின் சீற்றம், நோய்த் தொற்று போன்ற காரணங்களினால் ஏற்படும் தாமதத்திற்கு நட்டஈடு வழங்கவேண்டிய அவசியமில்லை.

தொடர்மாடிக் குடியிருப்புகள் விடயத்தில் இத் தாமதம் சில வருடங்களுக்கும் நீடிப்பதுண்டு. ஆனால் இந்நீடிப்பு பற்றி 90 நாட்களுக்கு முன் அதற்கான அறிவித்தலை நிறுவனங்கள் வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும்.

இடைநிலை / இறுதி முடிவு திகதி (occupancy / final closing)

இது தொடர்மாடிக்குடியிருப்புக்களுக்கு மட்டுமே பொருத்தமானது. தொடர்மாடிக் குடியிருப்புக்களைக் கட்டும் நிறுவனங்கள் கட்டிடம் முற்றாகக் கட்டி முடியாத நிலையிலோ அல்லது குடியிருப்புகளில் குறிக்கப்பட்ட தொகை / வீதம் விற்காமல் இருக்கும் நிலையிலோ இடைநிலை முடிவுதிகதியை (occupancy closing) அறிவிப்பார்கள். இக்குடியிருப்புகள் கட்டாயமாக 100% நிறைவுபெற்ற நிலையில் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சில வேலைகள் பூரணமற்ற நிலையில் அவை குடியிருப்புக்குத் தயார் என அந்நிறுவனங்கள் அறிவிக்க உரிமையுண்டு. ஆனால் அதற்கு முன்னதாக ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டு அத் திகதியில் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு பரிசோதகர் உங்களை அழைத்து குடியிருப்பின் உள்ளக நிலையை நீங்கள் பார்த்து திருப்தியடைய வழி செய்வார். ஒருவர் வாழ்வதற்கு அத்தியாவசியம் எனக் கருதப்படும் அனைத்து தேவைகளும் வசதிகளும் இருக்கிறதென அவர் கருதினால் நிறுவனம் அறிவித்த இடைநிலை முடிவு திகதியை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அத் திகதி முதல் கட்டிட நிறுவனத்துக்கு நீங்கள் மாத வாடகை செலுத்தவேண்டும். இதிலிருந்து 3 முதல் 8 மாதங்கள் (இதை விடவும் நீடிக்கலாம்) கடந்த பின்னர் இறுதி முடிவு திகதியை (final closing) நிறுவனம் அறிவிக்கும். இத் திகதி அறிவிக்கப்பட்டவுடன் நீங்கள் வங்கியிலோ நிதி நிறுவனத்திலோ அடமானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் இடைநிலை முடிவு திகதியை அறிவிக்காமல் நேரடியாகவே இறுதி முடிவு திகதியை அறிவிப்பதுமுண்டு.

எழுத்துச் செலவுகள் (closing costs)

வீடு வாங்குபவர்கள பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமிது என்பதால் கடைசி வரை பொறுத்திருக்காமல் இடை நிலை முடிவு திகதி அறிவிப்பு வந்தவுடனே உங்கள் சட்டத்தரணியை அணுகி அண்ணளவான எழுத்துச் செலவு பற்றி விசாரித்து அறிந்திருப்பது நல்லது. தனி வீடுகளை வாங்குபவர்கள் முடிவு திகதி அறிவிக்கப்பட்டவுடன் சட்டத்தரணியை ஆலோசிப்பது அவசியம். புதிய வீடுகளை நிர்மாணிக்கும் நிறுவனங்களிடமிருந்து நகராட்சி சில வரிகளை அறவிடுவது வழக்கம். குறிப்பாக பாடசாலைகளைப் பராமரிக்கும் வரி (education levy), பூங்காக்களைப் பராமரிக்கும் வரி (park levy) எனப் பலவகையான வரிகளை நிறுவனங்கள் வீடுகளை வாங்குபவர்களிடமிருந்து அறவிடுகின்றன. இவை வாங்கும் விலைக்குள் அடங்காது மேலதிகமாக விலையுடன் கூட்டப்படுகின்றன. இதைவிட வேலி, வாகனத் தரிப்பு, தண்ணீர் மானி (water meter) என்று பற்பல செலவுகளும் இறுதி நேரத்தில் மேலதிகமாகக் கூட்டப்படுவது வழக்கம். ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நீங்கள் உங்கள் சட்டத்தரணியுடன் ஆலோசித்தால் அவர் மேற்கூறிய வரித் தொகையைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயல்வார். இதைவிட ஆதன மாற்று வரி (land transfer tax) மிக முக்கியமான ஒன்று. ரொறோண்டோ நகருக்குள் வீடுகளை வாங்குபவர்களுக்கு இவ்வரி இரண்டு மடங்காகும். எனவே இறுதிவரை பொறுக்காது இறுதித் திகதிக்கு (final closing) குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சட்டத்தரணியிடம் இதுபற்றி ஆலோசிப்பது அவசியம். (Pic. Credit: Jennifer Kallenberg / Unsplash)

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *