veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Money

கணவன் அல்லது மனைவி இறந்தால் அவர்களது CPP, OAS கொடுப்பனவுகளுக்கு என்ன நடக்கும்?

கனடா ஓய்வூதியத் திட்டம் (Canada Pension Plan (CPP)), முதுமைப் பாதுகாப்பு (Old Age Security (OAS)) ஆகிய கொடுப்பனவுகள் ஓய்வுபெறும் முதிய குடிமக்களுக்கு அவரவர் தகுதி, வருமானம் ஆகியவற்றுக்கேற்ப கனடிய மத்திய அரசு வழங்கும் மாதாந்த கொடுப்பனவுகளாகும்.

கனடா ஓய்வூதியத் திட்டத்தில் பலன்பெறுவதற்கு ஒருவர்:

  • குறைந்தது 60 வயதுடையவராக இருக்கவேண்டும்
  • ஏதாவது வழிகளில் (பொதுவாக சம்பளத்திலிருந்து கழிவு) இத்திட்டத்திற்கு பணம் செலுத்தியவராக இருக்கவேண்டும். கனடாவில் வேலை செய்யாத பட்சத்தில் கணவன் / மனைவி /தாம்பத்ய பங்காளியிடமிருந்து சட்டபூர்வமாக வருமானம் பெற்றவராக இருக்கவேண்டும்.

ஒருவர் வேலை செய்துகொண்டிருக்கும்போதே அவர் 60 வயதை அண்மித்தவுடன் CPP இற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் 65 வயதைப் பூர்த்தி செய்யும்போது விண்ணப்பித்தால் முழுமையான ஓய்வூதியமும், 60 வயதில் விண்ணப்பித்தால் குறைக்கப்பட்ட ஓய்வூதியமும் கிடைக்கும். வேலை செய்துகொண்டிருக்கும்போது 60 வயதில் ஓய்வூதியம் பெற்றாலும் 70 வயது வரை தொடர்ந்தும் ஒவூதியத்திற்கான கட்டுப்பணத்தை (contribution) செலுத்திக்கொள்ள முடியும். விரும்பினால் 65 வயது வந்தவுடன் நீங்களாகவே இக்கட்டுப்பணத்தை நிறுத்திக்கொள்ளவும் முடியும். நீங்களாக நிறுத்தாவிட்டால் 70 வயதுவரை உங்கள் சம்பளத்திலிருந்து இதற்கான தொகை அறவிடப்படும். ஒய்வூதியக் கொடுப்பனவு மத்திய அரசினால் அவரது வாழ்நாள் வரை வழங்கப்படுகிறது.

கியூபெக் மாகாணவாசிகள் CPP இற்குப் பதிலாக QPP என்ற பெயரில் இதைப் பெறுகிறார்கள். இதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் வரைமுறைகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்:

  • நீங்கள் கியூபெக் மாகாணத்தில் மட்டுமே பணியாற்றியிருக்க வேண்டும்
  • கியூபெக் மாகாணத்திலும் வேறு ஏதாவது ஒரு மாகாணம் / பிரதேசத்தில் பணிபுரிந்தபின் கியூபெக்கில் வதிபவராக இருக்க வேண்டும்
  • தற்போது கனடாவிற்கு வெளியே வசித்தாலும் கனடாவில் இறுதியாக வசித்த மாகாணம் கியூபெக்காக இருக்க வேண்டும்

முதுமைப் பாதுகாப்பு கொடுப்பனவின் தொகை பின்வரும் காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும். இதைப் பெறுவதற்கான நிபந்தனைகள் கீழே தரப்படுகின்றன:

  • கனடிய பிரஜையாக அல்லது நிரந்தர வசிப்பாளராக (landed immigrant) இருக்க வேண்டும்
  • 18 வயதிலிருந்து தொடர்ந்து 10 வருடங்கள் கனடாவில் வசித்திருக்க வேண்டும்
  • இக்கொடுப்பனவு உங்கள் வருமானத்தைப் பொறுத்து வரிவிதிப்புக்குள்ளாகும்.

CPP

கணவனோ, மனைவியோ அல்லது தாம்பத்ய பங்காளியோ இறக்க நேரிட்டால் எஞ்சியிருக்கும் பங்காளிக்கு ஒரு கொடுப்பனவு வழங்கப்படும். Survivor’s Pension என அழைக்கப்படும் இக்கொடுப்பனவைப் பெறுவதற்கு பின்வரும் தகுதிகளை ஒருவர் பெற்றிருக்க வேண்டும்:

  • இறந்தவருடன் திருமண பந்தத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது
  • இறந்தவருடன் குறைந்தது ஒருவருடமாவது தாம்பத்ய பங்காளியாக இருந்திருக்க வேண்டும். (இதற்காக பிரத்தியேக பத்திரம் ஒன்று நிரப்பபடவேண்டும்)

எஞ்சிய பங்காளிக்கான இக்கொடுப்பனவு 65 வயது வரை இறந்தவர் பெற்ற CPP தொகையின் 60 % மும் 65 வயதுக்கு மேல் அது 37.5% மாகவும் இருக்கும். ஆனால் எல்லோரும் நினைப்பதைப் போல இறந்தவர் பெற்ற மாதாந்த CPP கொடுப்பனவின் 60% / 37.5% எஞ்சிய பங்காளிக்குக் கிடைக்கவேண்டுமென்று கட்டாயமில்லை. எஞ்சிய பங்காளி பெறும் அவரது சொந்த CPP கொடுப்பனவைப் பொறுத்து இது மாறுபடும் அல்லது கிடைக்காமலே போய்விடும். அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் அதி உயர் தொகையே ஒருவரது CPP ஆக இருக்கும். எஞ்சியிருக்கும் பங்காளியின் சொந்த CPP இத்தொகையை மீறியிருப்பின் இறந்தவரின் CPP அவருக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் இறந்தவருக்கான இறப்புக் கொடுப்பனவான ( death benefit) $2500.00 மட்டுமே எஞ்சியவருக்குக் கிடைக்கும்.

OAS

கணவன் / மனைவி / தாம்பத்ய பங்காளியின் மரணத்துடன் இக்கொடுப்பனவு முற்றாக நிறுத்தப்பட்டுவிடும்.

கணவன் / மனைவி / தாம்பத்ய பங்காளி இறக்கும்போது அவரது இறப்பை நிரூபிக்க பின்வரும் பத்திரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன:

  • இறப்புச் சாட்சிப் பத்திரம்
  • மரணச்சடங்குகளைச் செய்த பணிப்பாளரிடமிருந்து (funeral director) அத்தாட்சிப் பத்திரம்
  • மருத்துவரிடமிருந்து அத்தாட்சிப் பத்திரம்

இருக்கும்போதே அனுபவித்துவிடவிரும்பும் பலர் 65 வயதுவரை பொறுத்திருக்காது 60 வயது வந்தவுடனேயே CPP / OAS கொடுப்பவுக்கு விண்ணப்பிப்பது வழக்கமாகி வருகிறது. இதுபற்றிய பூரண விளக்கத்தைப் பெற உங்கள் கணக்காளார் / வருமான வரிக் கணிப்பாளர் / நிதித் திட்டமிடல் செய்பவர் (financial planner) ஆகியோருடன் ஆலோசியுங்கள். கனடிய அரசின் இணையத்தளத்திலும் விரிவான விளக்கங்கள் உண்டு. Photo by Diana Parkhouse on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *