MoneyReal Estate

கனடா வரவு செலவுத் திட்டம் 2024: வீட்டுச் சந்தையைப் பாதிக்குமா?

கனடிய மத்திய அரசு இம்மதம் (ஏப்ரல் 17) தனது வரவு செலவுத் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. கோவிட் பொருளாதாரத்தின் பாதிப்புகளிலிருந்து இன்னும் முற்றாக வெளிவரமுடியாத நிலையில் விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதனாலும் இவ்வரவு செலவுத் திட்டம் வாக்காளரைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. வீட்டுச் சந்தையைப் பொறுத்தவரை, இளைய தலைமுறையினரின் வருமானங்களுக்கேற்ப வீடுகளை வாங்க முடியாமல் இருப்பது அவர்களில் பெரும்பாலாலோரின் ஆதரவை லிபரல் கட்சி இழந்துவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துவரும் நிலையில் இளையோரைத் திருதிப்படுத்தும் வகையில் இவ்வருட வரவு செலவுத் திட்டம் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அடுத்த 5 வருடங்களுக்கு $52.9 பில்லியன் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் $8.5 பில்லியன் வீடமைப்பு திட்டங்களுக்கு மட்டும் செலவிடப்படும். 2031 ஆண்டிற்குள் 2 மில்லியன் புதிய வீடுகள் உட்பட 3.9 மில்லியன் வீடுகள் சந்தைக்கு வரவுள்ளன. Canada Post போன்ற அரச கூட்டுத்தாபனங்களுக்குச் சொந்தமான பாவனையற்ற கட்டிடங்களில் 50% மான கட்டிடங்கள் குடியிருப்புகளாக மாற்றப்படவுள்ளன. இதைவிட 30,000 புதிய தொடர்மாடிக் கட்டிடக் குடியிருப்புகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புக்களை வாங்குபவர்களுக்கான கடனை மீளச் செலுத்தும் கால எல்லை (amortization) 25 வருடங்களிலிருந்து 30 வருடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாதாந்த கட்டுப்பணம் குறைக்கப்படுவதோடு குறைந்த வருமானங்களுள்ளவர்கள் அடமானங்களுக்குத் தகுதிபெறும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் 30 வருட கால விரிவாக்கத்தின்போது அடமானம் எடுப்பவர் அதிக வட்டியைச் செலுத்தவேண்டி ஏற்படுமென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

பலர் எதிர்பார்த்தபடி அடமான அழுத்த சோதனையில் (Mortgage Stress Test) எந்தவித மாற்றமும் இல்லை. அடமானங்களை எடுப்பவர்களது வருமானத் தேவையை நிர்ணயிப்பதற்காக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட இவ்வட்டி வீதம் தற்போது 5.25% மாக இருக்கிறது. வங்கி வட்டி வீதம் 4% மாக இருந்தாலும் கடனுக்கு விண்ணப்பிப்பவரின் வருமானத் தேவையை 5.25% வட்டிக்கே கணிக்கப்படும். இதில் எந்தவித மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.

முதன் முதலாக வீடுகளை வாங்குபவர்கள் தற்போது தமது RRSP சேமிப்பிலிருந்து $35,000 டாலர்களை வரித் தண்டம் இல்லாமல் முற்பணத்திற்காகப் பாவிக்க முடியும். இது $60,000 டாலராக உயர்ந்த்தப்படுகிறது.

தற்போது முதலீட்டிற்கென வீடுகளை, இதர அசையாச் சொத்துக்களை அல்லது வியாபார நிறுவனங்களை வாங்கி விற்கும்போது ஈட்டும் இலாபத்தின் 50% முதலீட்டு இலாப வரியாக அறவிடப்பட்டு வருகிறது. இனிமேல் இவ்விலாபம் $250,000 த்திற்கு மேலாக இருப்பின் அதன் மூன்றில் இரண்டு பங்கு இலாப வரியாக அறவிடப்படும். ஆனாலும் சிறிய தொழில் நிறுவனங்கள், பண்ணைகள், மீன்பிடித் தொழில்களை விற்பவர்களது இலாபத்திற்கு $1,016,836 டாலர் வரை வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இவ்விலாப வரி அதிகரிப்பு இவ்வருடம் ஜூன் 25 இல் நடைமுறைக்கு வருகிறது.

வெளிநாட்டார் கனடாவில் வீடுகளை வாங்குவதற்கான தடை பெப்ரவரி 2024 இல் அறிவிக்கப்பட்டது. இவ்விதி குடியிருப்பு வீடுகளை வாங்குபவர்களுக்கு 2027 ஆம் ஆண்டு மட்டும் நடைமுறையிலிருக்கும்.

இப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘கனடிய மாணவர் நிதி உதவி’ (Canada Student Financial Assistance) இனிமேல் வீட்டு வாடகை அதிகரிப்பு போன்ற செலவீன அதிகரிப்புகளையும் உள்ளடக்கியதாகவிருக்கும். இதற்காக இவ்வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு $154.6 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையும் (grants) அதிகரிக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாத கடன்களிலும் அதிகரிப்பு உண்டு.

இவ்வரவு செலவுத் திட்டம் பெரும்பாலும் வீட்டுச் சந்தையைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இதில் முக்கியமான அம்சம் முதலீடுகளுக்காக வீடுகளை வாங்குபவர்களை இலக்கு வைப்பதாக இருக்கிறது. முதலீட்டு இலாப வரி அதிகரிப்பு இதையே உணர்த்துகிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும்போது பிற்காலத்தில் அவற்றை அதிக விலைக்கு விற்று இலாபத்தைச் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே அவற்றில் முதலீடு செய்கின்றனர். இதனால் தான் கடந்த சில வருடங்களில் வாடகை அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் போனது. தற்போது அறவிக்கப்பட்டிருக்கும் ‘இலாப வரி’ இவர்களது இலாபத்தில் பெரும் பங்கை விழுங்கிவிடுமென்பதனால் பலர் ஜூன் 25, 2024 இற்கு முதல் தமது வீடுகளை விற்றுவிட முயற்சிப்பார்கள். இதனால் அதிக வீடுகள் சந்தைக்கு வர வீடுகளை வாங்குவதற்காகப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவிருக்கும். (Image Credit: Winnipeg Free Press)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *