Auto

கனடா: வாகன ஓட்டுனர்களுக்கான புதிய விதிகள்

கனடா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாகன ஓட்டுனர்களுக்கான புதிய விதிகள் ஜூலை 01, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதுவரை நடைமுறையிலிருக்கும் விதிகள் பெரும்பாலானவை அந்தந்த மாகாணங்களினால் உருவாக்கப்பட்ட விதிகளாகும். வரவிருக்கும் புதிய விதிகள் சகல மாகாணங்களுக்கும் சம பலத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். இவ்விதிகளுக்குச் சமமான மாகாண விதிகள் இருப்பின் அவை புறந்தள்ளப்பட்டு அங்கு இப்புதிய விதிகளே நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்படுகிறது. வணிக மற்றும் தனியார் தேவைகளுக்கெனப் பாவிக்கப்படும் அனைத்து வாகனங்களை ஓட்டுபவர்களும் இவ்விதிகளை அனுசரித்தேயாக வேண்டும். இவ்விதிகளில் சில:

பொதுப்பாவனைக்கான தெருக்களைப் பாவிக்கும் அனைத்து கனரக வணிக வாகனங்களினதும் உச்ச வேகம் மணித்தியாலத்துக்கு 105 கி.மீ. ஆகவிருப்பதோடு வாகனங்கள் இவ்வுச்ச வேகத்தைத் தாண்ட முடியாதவாறு வேகக்கட்டுப்பாட்டைச் செயற்படுத்தும் சாதனங்கள் (speed limiting devices) இவ்வாகனங்களில் பொருத்தப்படவேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் 2009 முதல் இப்படியான சட்டம் நடைமுறையில் இருப்பினும் ஜூலை 01 முதல் இச்சட்டம் அனைத்து மாகாணங்களிலும் அமுலுக்கு வருகிறது.

வணிக வாகனங்களை ஓட்டுபவர்கள் நீண்ட நேர ஓட்டுதலினால் களைத்துப் போய் அதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக புதிய ‘ஓட்டுனர் நேரக் கட்டுப்பாடு’ (Hours of Service (HOS)) நடைமுறைக்கு வருகிறது. ஓட்டுனர் ஒவ்வொருவரும் தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் வாகனமோட்டிய பின்னர் கட்டாயமாக 15 நிமிட ஓய்வை எடுக்க வேண்டும். முன்பு நடைமுறையிலிருந்த 8 மணித்தியால ஓட்டத்திற்குப் பின்னான 30 நிமிட ஓய்வு இப்போது இரண்டு 15 நிமிட ஓய்வுகளாகப் பிரிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 19 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்படுகிறது. விபத்துக்களின் போது காயமடைவதைத் தவிர்க்க, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பாதுகாப்பான ஆடைகள், சப்பாத்துகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும்.

பயிற்சி ஓட்டுனர்கள் (Learner Drivers), குறிப்பாக 6L, 7 அல்லது 8 வகையில் அடங்குபவர்கள், வாகனங்களை ஓட்டும்போது ஃபோன்கள் போன்ற எலெக்ட்றோனிக் சாதனங்களை வைத்திருக்க முடியாது. மீறுபவர்கள் மீது அபராதம், குறைபாட்டுப் புள்ளிகள் (demerit points) மற்றும் அனுமதிப் பத்திரப் பறிப்பு (license suspension) ஆகிய தண்டனைகள் பிரயோகிக்கப்படலாம்.

மேற்கூறிய விதிகள் அனைத்தும் கனடாவின் சகல மாகாணங்களிலும் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது சமபலத்துடன் பிரயோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Image Credit: TB Board)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *