veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Health

கனடா: 2024 ஆம் ஆண்டிற்கான பற்சிகிச்சை உதவிப்பணம் – அறிந்திருக்க வேண்டியவை

அதிகரித்து வரும் செல்வுகள் காரணமாக வருமானம் குறைந்த கனடியர்கள் தமௌ பற்சிகிச்சைகளைத் தவிர்த்தோ அல்லது தாமதித்தோ வருவதுண்டு. இவர்களது தேவைகளை மனதில் கொண்டு கனடிய மத்திய அரசு பற்சிகிச்சை உதவிப்பணத் திட்டமொன்றைச் சமீபத்தில் அறிவித்திருந்தது. ‘கனடா பற்சிகிச்சை உதவி’ (Canada Dental Benefit (CDB) ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் மூலம் உதவிகளைப் பெற விரும்புபவர்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

கனேடிய மத்திய அரசு இத் திட்டத்தை மூந்று பிரிவுகளாக நடைமுறைப்படுத்துகிறது.

  1. 65-69 வயதில் இருப்பவர்கள் 2024 மே மாதம் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்
  2. இயலாமை வரிச்சலுகைத் தராதரப் பத்திரங்களை (Disability Tax Credit certificate) வைத்திருப்பவர்களும், 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் ஜூன் 2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
  3. மீதமானவர்களுக்கு 2025 இன் பின்னரே விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்
  • இவ்வுதவிப்பணத்திற்கு ஒருவர் விண்ணப்பிப்பதானால் அவரது, கழிவு தள்ளிய (net income) உச்ச குடும்ப வருமானம் $90,000 டொலர்களுக்குக் கீழே இருக்கவேண்டும்.
  • தனியார் காப்புறுதி பெறுபவராக இருக்ககூடாது.
  • விண்ணப்பிப்பதற்கு முந்திய வருடம் வருமான வரி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்

தனியார் காப்புறுதி என்பதைக் கனடிய அரசு பின்வருமாறு வரைவு செய்கிறது

  •  நீங்கள் பணி புரியும் ஸ்தாபனத்திடமிருந்து நீங்களோ அல்லது உங்கள் துணையரோ காப்புறுதி பெறுபவராக இருக்கக்கூடாது
  •  நீங்களோ உங்களது குடும்பத்தில் ஒருவரோ ஓய்வூதியம் பெறுபவராக இருந்து அதன் கீழ் நீங்களும் பலன் பெறுபவராக இருக்கக்கூடாது
  •  நீஙளோ அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவரோ ஒரு குழுமக் காப்புறுதி ( group insurance) மூலம் பலன்பெறுபவராக இருக்கக்கூடாது

மார்ச் 31, 2024 இல் உங்கள் வயது 70 ஐ அடைந்திருக்குமானால் உங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உங்கள் தகமை பற்றிய கடிதமொன்று வந்திருக்க வேண்டும். இக் கடிதத்தில் உதவிப் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயன்முறை இணைக்கப்பட்டிருக்கும்.

  • பற்களைச் சுத்தம் செய்தல், பளபளப்பாக்குதல் (polishing) மற்றும் ஃபுளோறைட் பராமரிப்பு
  • எக்ஸ்-றே படப்பிடிப்பு
  • துளைகள் நிரப்புதல்
  • பொய்ப் பல் (dentures) கட்டுதல்
  • பற்களைப் பிடுங்காமல் பாதுகாத்தல் (root canals)

போன்ற சிகிச்சைகள் உடபடப் பலவகையான சிகிச்சைகள் இத்திட்டத்தில் அடங்கும். இச்சிகிச்சைகளுக்கான பணத்தை பல் வைத்தியர்கள் / சிகிச்சையாளர்கள் நேரடியாக மத்திய அரசிடமிருந்து பெறுவார்கள். கனடாவின் மிகப்பெரியதும் பழையதுமான Sun Life காப்புறுதி நிறுவனம் மூலம் சிகிச்சை தருபவர் பணத்தைப் பெற்றுக்கொள்வார்.

எல்லா விண்ணப்பதாரிகளும் தமது சிகிச்சைக்கான செலவின் 100% த்தையும் மீளப்பெறுவார்கள் எனக் கூறமுடியாது. விண்ணப்பதாரிகளின் வருமானத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகை அரசாங்கத்தினால் வழங்கப்படும். மீதி செலுத்தவேண்டிய தேவை இருப்பின் அதை விண்ணப்பதாரியே செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு:

  • உங்கள் வருமானம் $70,000 த்திற்கு உள்ளே இருப்பின் முழுச் செலவிற்கும் அரசாங்கமே பொறுப்பு
  • வருமானம் $70,000 – $79,999 த்திற்கு இடைப்பட்ட நிலையிலிருந்தால் செலவின் 40% த்தை நீங்கள் செலுத்த வேண்டும்
  • வருமானம் $80,000 – $89,999 ஆக இருப்பின் செலவின் 60% த்தை நீங்கள் செலுத்த வேண்டும்

இந்த மேலதிகச் செலவுகளை நீங்கள் சிகிச்சை தருபவருக்கு நேரடியாகச் செலுத்தவேண்டும். மேலதிகத் தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும். (Photo by Hush Naidoo Jade Photography on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *