Real Estate

குறுங்கால வாடகை வீடுகள் ( Short term rentals) மீதான சட்ட நடவடிக்கை வீட்டு விலைகளைப் பாதிக்குமா?

கனடாவில் தற்போது ஏற்பட்டுள்ள வீட்டுப் பஞ்சத்திற்கு குறுங்கால வீட்டு வாடகையும் ஒரு முக்கியமான காரணம் எனக் கருதி அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன. சென்ற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அன்று மத்திய நிதி அமைச்சரும் உதவி பிரதமருமான கிறிஸ்தியா ஃபிறீலாண்ட் இவ்வருடத்தின் நான்காம் கூற்றுக்கான நிதியறிக்கையைப் பாராளுமன்றத்தில் வெளியிட்டபோது குறுங்கால வீட்டு வாடகை மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.

முதலீட்டாளர்கள் இரண்டாவது, மூன்றாவது வீடுகளையோ அல்லது கோடை விடுமுறை வீடுகளையோ வாங்கி Airbnb / Booking.com போன்ற குறுங்கால வாடகை நிறுவனங்கள் மூலம் வாடகைக்கு விடுகிறார்கள். சில முதலீட்டாளர்கள் தொடர்மாடிக் குடியிருப்புகளில் பல குடியிருப்புகளைக் குறைந்த வாடகைக்கு எடுத்து கூடிய வருமானம் தரும் குறுங்கால வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் நீண்ட காலக் குடியிருப்பாளர்கள் வீடுகளை வாங்கவோ அல்லது வாடகைக்கு அமர்த்தவோ முடியாது திண்டாடுகிறார்கள். இதனால் தான் பெரும்பாலான கனடிய மாகாணங்களில் வீட்டு விலை அதிகரிப்பும், வீட்டுப் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசின் குடிவரவுக் கொள்கை மற்றும் மத்திய மாநில அரசுகளின் வரியிறுப்புக் கொள்கை என நிபுணர்கள் கூறி வருகிறார்கள். வீட்டுப் பற்றாக்குறை காரணமாக இவ்வரசுகளுக்கு, குறிப்பாக லிபரல் அரசுக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு உருவாகியதோடு அடுத்த தேர்தலில் அக்கட்சி ஆட்சியை இழப்பதற்கான சாத்தியமும் உருவாகியுள்ளது.

குறுங்கால வாடகைக்கு முழு வீட்டையோ அல்லது வீட்டின் ஒரு பகுதியையோ 28 நாட்களுக்குக் குறைவாக ஒருவருக்கு வாடகைக்கு கொடுப்பதை மாகாண அரசுகள் சட்டபூர்வமாக்கியுள்ளன. இப்படியான குறுங்கால வாடகை வியாபாரத்தை நடத்தும் நிறுவனங்கள் நகராட்சி அரசுகளில் பதிவுசெய்து அவற்றுக்கு வாடகையின் குறிக்கப்பட்ட வீதமொன்றை வரியாகச் (Municipal Accomodation Tax (MAT)) செலுத்த வேண்டும் (ரொறோண்டோவில் இது 6%). Airbnb அல்லது Booking.com போன்றவை இப்படியாகப் பதியப்பட்ட நிறுவனங்கள்.

இருப்பினும் இப்படியான குறுங்கால வாடகைக்கு வீடுகளைப் பெற்றுக்கொண்டு வருபவர்கள் வீட்டின் சுற்றாடல்களை அசுத்தப்படுத்துவது, சத்தம், கேளிக்கைகள் காரணமாக அயலவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது ஆகியவற்றை முன்னிட்டு நகராட்சி அலுவலகங்களுக்கு நிரம்ப முறையீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு குறுங்கால வாடகை மூலம் வருமானம் பெறும் முதலீட்டாளர்கள் தமது சொந்த வருமானவரியைக் குறைப்பதற்காக இப்படியான வாடகை வீட்டிற்கான செலவுகளை வரிக்கணிப்பில் உள்ளிடுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் குறுங்கால வாடகை தொடர்பாக ஒரு சட்ட மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதன் பிரகாரம் குறுங்கால வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகளின் உரிமையாளர் பற்றிய விபரங்களை Airbnb, booking.com போன்ற நிறுவனங்கள் நகராட்சியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் நகராட்சியின் சட்டங்களை மீறுபவர்கள் மீது அபராதங்களை விதிக்க நகராட்சிகளுக்கு இலகுவாக இருக்கும். அது மட்டுமல்லாது ஒருவர் தனது முதன்மை வதிவிடம் (principal residence) மற்றும் அவ்வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள இன்னுமொரு குடியிருப்பை (secondary suite / accessory dwelling) மட்டுமே குறுங்கால வாடகைக்காக விட முடியும் என்பதும் இன்னுமொரு சட்ட மாற்றம். அதாவது தாம் குடியிருக்காத ஒரு குடியிருப்பை ஒருவர் குறுங்கால வாடகைக்கு விட முடியாது என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதனால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி சமீபத்தில் வாங்கிய கொண்டோமினியம் குடியிருப்புக்களைக் கூட விற்றுவிடப் புறப்பட்டிருக்கிறார்கள். கெலோனா நகரசபையின் இந்த அதிரடி நடவடிக்கை (ஒக்டோபர் மாதம்) அறிவிக்கப்பட்டபின் இந்த மாதத்தில் ஒரு கட்டிடத்தில் மட்டும் பெருந்தொகையான குடியிருப்புகள் விற்பனைக்கு வந்திருப்பதாக விற்பனை நிறுவனமொன்று அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் குடியிருப்புகளை வாங்கியவர்கள்கூட அவற்றை விற்கத் துடிக்கின்றனர் என்கிறார் அந்த விற்பனை முகவர். மத்திய ஓக்கனாகன் பகுதியில் மட்டும் 250 புதிய வீடுகளும், 392 கொண்டோ குடியிருப்புக்களும் விற்பனைக்கு வந்துவிட்டன எனவும் அவர் கூறுகிறார். இச்சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் விக்டோரியா நகரில் மட்டும் விற்பனைக்கு வந்த கொண்டோ குடியிருப்புகள் 44 (ஏறத்தாழ 400%). இவற்றில் சென்ற மாதம் இரண்டு குடியிருப்புக்கள் மட்டுமே விற்றிருக்கின்றன.

இச்சட்டம் இப்போதிருந்து 2024 பிற்கூற்றிற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தேவையானவர்களுக்கு வீடுகள் கிடைக்க வழிசெய்யப்படுகிறது என இச்சட்டத்தைக் கொண்டுவந்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணசபை அமைச்சர் ரவி கலோன் கூறியுள்ளார். கெலோனா நகரசபை இதில் கண்ட வெற்றியைத் தொடர்ந்து மேலும் 13 நகரசபைகளுக்கு இச்சட்டம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் கொதிநிலைகளை அவ்வப்போது உணர்ந்து சட்டத் திருத்தங்களைச் செய்வதில் பிரிட்டிஷ் கொலம்பியா அரசு எப்போதும் முன்மாதிரியாக இருந்துவருகிறது. வெற்றுடமை வரியை (Vacancy Tax) முதலில் அறிவித்ததும் அது தான்.

கனடாவின் வீட்டுத் தட்டுப்பாட்டிற்கும் குறுங்கால வாடகை வியாபாரத்துக்குமிடையே பாரிய தொடர்பிருப்பது பற்றி ஏற்கெனவே நிபுணர்கள் அரசுகளை எச்சரித்து வந்திருக்கின்றனர். மத்திய அரசின் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி 2015 முதல் 2018 வரை குறுங்கால வாடகை வியாபாரத்தின் மூலமான வருமானம் $2.2 பில்லியன்களால் உயர்ந்திருக்கிறது. மூன்றே வருடங்களில் அது 10 மடங்கினால் அதிகரித்திருக்கிறது.

மாகாண அரசுகள் முன்னெடுக்கும் இத்திட்டங்களைப் பின்பற்றி மத்திய அரசும் குறுங்கால வாடகைக் குடியிருப்பு முகவர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டி வருகிறது என மத்திய அரசின் வீடமைப்பு அமைச்சர் சோன் ஃபிறேசர் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் எடுத்த நடவடிக்கையின் தூண்டுதலால் ரொறோண்டோ, மொன்றியால், வான்கூவர் நகரங்களில் நீண்ட காலக் குடியிருப்புக்காக 30,000 வீடுகள் சந்தைக்கு வருமெனத் தான் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ஃபிறீலாண்ட் கூறியிருக்கிறார்.

வீட்டு விலை, கட்டுமானப் பொருட்களின் விலை ஆகியவற்றின் அதிகரிபு, பணியாளர் பற்றாக்குறை, கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக புதிய வீடுகளின் நிர்மாணம் அரசுகள் எதிர்பார்த்ததை விட மேலும் குறைவடைந்து போனதால் வேறு வகைகளில் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைச் சந்தைக்குக் கொண்டுவருவதே விரைவாகவும் சுலபமாகவும் சாதிக்கக்கூடியது என்பதை அரசுகள் இப்போதுதான் உணரத் தலைப்பட்டிருக்கின்றன. (Image Credit: Photo by Jas Rolyn on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *