கனடா

டானியல் அமலதாஸ் கொலை: 17 வயது இளைஞர்கள் இருவர் கைது

ஆகஸ்ட் 21, 2025 அன்று ஸ்காபரோ நகர்மைய வளாகத்திலுள்ள கழிப்பறையொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சந்தேகத்துக்கிடமாக மரணமடைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட டானியல் அமலதாஸ் என்னும் இளைஞரின் மரணம் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறோண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடாவின் பெரும்பாலான தமிழர் வாழும் நகரமான ஸ்காபரோவின் நகரமண்டப வளாகத்தில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் உணவு அங்காடிக்கு அருகாமையிலுள்ள கழிப்பறையொன்றில் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி பிற்பகல் 19 வயதுடைய டானியல் அமலதாஸின் உடல் சூட்டுக் காயத்துடன் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது. அப்போது டானியல் அமலதாஸின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாமென காவல்துறை சந்தேகம் தெரிவித்திருந்தது. மரணமடைந்த அமலதாஸின் உடலுக்கருகில் ஒரு கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதெனவும் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதற்கான வெடிச்சத்தம் எதுவும் கேட்கப்பட்டிருக்கவில்லை எனவும் அமலதாஸின் உடலில் ஒரே ஒரு சூட்டுக் காயம் மட்டுமே காணப்பட்டது எனவும் இச்சம்பவத்தை விசாரிக்கும் ரொறோண்டோ காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் பகீர் சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

இக்கொலைக்கான நோக்கம் பற்றி எதுவித தகவலையும் காவல்துறை இதுவரை அறிவிக்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் இருவரும் இன்று (வெள்ளி, 29) ரொறோண்டோ நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக அறியப்படுகிறது. (Image Credit: TPS Handout)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *