Immigration

நிரந்தர வதிவிடவுரிமை வழங்கலுக்கு முன்னுரிமை வழங்க கனடிய அரசு யோசனை

சுகாதாரப் பணியாளர், விசேட தொழில் திறனாளர்கள், கல்விப் பணியாளர் மற்றும் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமை (Permanent Resdidency) வழங்கலுக்கு முன்னுரிமை வழங்குவதோடு அவர்களது விண்ணப்பங்களைத் துரிதமாகக் கையாள்வதற்கு குடிவரவு, அகதி மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) முடிவு செய்திருக்கிறது.

இதற்கு முன்னர் பரீட்சிக்கப்பட்ட EMPP என்னும் துரித வதிவிட வழங்கல் பாதை பரீட்சார்த்த திட்டம் வெற்றிகண்டதன் காரணமாக அதே போன்றொரு திட்டத்தை குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் பிரயோகிக்க கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின்படி விசேட தொழில் திறமைகளைக் கொண்ட அகதிகளும், குடிபெயர்க்கப்பட்டவர்களும் இந்நாட்டின் சுதந்திர பிரஜைகளாக வாழவும் பணியாற்றவும் வசதி செய்து கொடுப்பதுவே அரசின் தீர்மானமாகும்.

2018 இல் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட EMPP திட்டத்தின் பிரகாரம் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 970 பேர் நிரந்தர வதிவிடவுரிமை பெற்றுள்ளார்கள். இப்போது இப்பரீட்சார்த்த திட்டம் நிரந்தரமாக்கப்பட்டதோடு வேறும் பல துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு விவசாயம், மீன் பிடி துறைகளையும் இணைத்துக்கொள்ளும் திட்டமும் உள்ளதாக இத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடாவில் கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் மேற்படிப்புகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கும் மேற்படிப்பு / பணியனுமதிகளை ( Post Graduation Work Permit (PGWP)) வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. அது மட்டுமல்லாது வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களது கணவர் / மனைவிமாருக்கு கனடாவில் பணி புரியும் திறந்த அனுமதியையும் (Spousal Open Work Permits (SOWP)) வழங்க அரசு தீர்மானித்துள்ளதெனவும் இது பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அறியப்படுகிறது.

தற்காலிக வதிவிடவுரிமையுடன் கனடாவில் ஏற்கெனவே வதிபவர்களது வதிவிடவுரிமைகளை நிரந்தரமாக்கும் முயற்சியைத் துரிதப்படுத்தவும் இப்படியான விண்ணப்பங்களில் குறைந்தது 40% மானோருகாவது நிரந்தர வதிவிடவுரிமை வழங்க அரசு உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதே வேளை கனடாவில் வதிவிடவுரிமை பெற்றவர்களின் உறவினர்களைக் கனடாவிற்கு அழைக்கும் விண்ணப்பங்களைத் துரிதப்படுத்தவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. (Image Credit: IRCC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *