Money

ரொறோண்டோ ஆதன வரி 10.5% உயர்வு – மாகாண அரசின் புதிய சட்டத்தின் பாதிப்பு!

கடந்த வருடம் ஒன்ராறியோ மாகாண அரசினால் சட்டமாக்கப்பட்ட சட்ட மூலம் 23 ஒன்ராறியோ வாசிகளுக்கு பாரிய அதிர்ச்சியைத் தரவுள்ளது. ‘அதிக வீடுகளை விரைவில் கட்டும் சட்டமெனப் பெயர் சூட்டப்பட்ட இச்சட்டம் வீட்டு நிர்மாண நிறுவனங்களுக்கு பல சலுகைகளைச் செய்துள்ளது. இதன் பிரகாரம் சில வகையான வீடுகளை / தொடர்மாடிக் குடியிருப்புக்களைக் கட்டும் நிறுவனங்கள் நகராட்சிகளுக்கு செலுத்தும் வரிகளிலிருந்து விலக்கம் பெறுகின்றன. இதனால் துண்டுவிழும் தொகையை இந்நகராட்சிகள் தாம் அறவிடும் ஆதன வரிகளை உயர்த்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள இச்சட்டம் வழி செய்கிறது. இதன் பிரகாரம் ரொறோண்டோ மாநகரசபை வீட்டுரிமையாளரிடமிருந்து அறவிடும் ஆதன வரியை 10.5% த்தால் அதிகரிக்கவுள்ளது. சில நகரசபைகள் தமது ஆதன வரியை இரண்டு மடங்கால் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

நகரசபைகள் தாம் அறவிடும் ஆதன வரி மற்றும் கட்டிட நிர்மாண அபிவிருத்திக்கான கட்டணங்கள் (bulding development cahrges) போன்றவற்றின் மூலம் பெறும் பணத்திலிருந்தே தெருச்சீரமைப்பு, கழிநீர்க் கால்வாய்ப் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்துச் சேவை, பூங்கா பராமரிப்பு, நூலக நிர்வாகம் போன்றவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்கின்றன. மாகாண அரசின் இப்புதிய வரிச்சலுகை அறிவிப்பினால் ரொறோண்டோ பெரும்பாகத்திலுள்ள 25 நகர சபைகளும் அவைகளது வருமானத்தில் பாரிய பற்றாக்குறை ஏற்படுமென இப்போதே எச்சரிக்க ஆரம்பித்துவிட்டன. இதன் மூலம் மக்களிடமிருந்து எதிர்நோக்கும் எதிர்ப்புகளை மாகாண அரசின்மீது திசை திருப்ப அவை முயல்கின்றன. இவற்றில் பல நகரசபைகள் தாம் எதிர்நோக்கும் இவ் வருமானப் பற்றாக்குறைய நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன. சனத்தொகை குறைந்த நகரசபைகள் தமது ஆதன வரிகளைக் கணிசமாக உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் முற்கணிப்பில்லாத குடிவரவுக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், குறுங்கால வீட்டு வாடகை அனுமதி போன்ற தூரநோக்கில்லாத கொள்கைகளால் கனடாவில் வீட்டு விலைகளும், வீட்டு வாடகைகளும் திடீரென அதிகரித்தமையே இப்போதுள்ள வீட்டுப் பற்றாக்குறை என்பது நிபுணர்களின் கருத்து. ஆனாலும் மத்திய அரசின் இத்திட்டங்களினால் மாகாண அரசுகளினது வருமானமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அவை தமது நட்டங்களைத் தமக்குக் கீழிருக்கும் நகரசபைகள் மீது ஏற்றி விடுகின்றன.

மாகாண அரசின் புதிய சட்டத்தின்படி அடுத்த 10 வருடங்களில் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மாணிக்கவேண்டும். இவற்றில் சில வருமானம் குறைந்தவர்களுக்கான மலிவான வீடுகளாகவிருக்கும் பட்சத்தில் அவற்றை நிர்மாணிப்பதற்கான நகரசையின் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இதனால் வீட்டு நிர்மாண நிறுவனங்கள் மலிவான வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்பதே மாகாண அரசின் சிந்தனை. ஆனால் இதன் மூலம் துண்டுவிழும் வருமானத்தை நகரசபைகள் தமது ஆதன வரி அதிகரிப்பு மூலம் மீளப்பெறத் திட்டமிட்டுள்ளன. இதே வேளை வீட்டு நிர்மாண நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்கள் கடந்த 13 வருடங்களாக 600% த்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றை நகர அபிவிருத்திகளுக்கெனச் செலவிடாமல் நகரசபைகள் பதுக்கிவிடுகின்றன எனவும் மாகாண அரசின் நகரசபை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்டீவன் கிளார்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ரொறோண்டோ மாநகரசபை தான் நிர்மாண நிறுவனங்களிடமிருந்து சேகரித்த $2.3 பில்லியன் டாலர்களை இருப்பில் வைத்திருந்தும் அடுத்த இரு வருடங்களில் 46% ஆதன வரி அதிகரிப்புக்குத் திட்டம் தீட்டியுள்ளன எனவும் அமைச்சர் கிளார்க் தெரிவித்துள்ளார். இப்படி மாகாணம் முழுவதுமுள்ள நகரசபைகளிடம் $9 பில்லியன் டாலர்கள் இருப்பில் இருக்கிறது.

ஆனால் இப்பணம் உடனடியான பாவனைக்கானது அல்ல எனவும் புதிய வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படும்போது அதற்கான நீர் வழங்கல், கழிநீர்க் கால்வாய் வசதிகள் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்காகவே அப்பணம் இருப்பில் வைக்கப்படுகிறது; அதுவும் மாகாண அரசின் சட்டத்தின்படிதான் செய்யப்படுகிறது என முன்னாள் ரொறோண்டோ மாநகர முதல்வர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்தாலும் மாகாண அரசின் இத்திட்டம் சாத்தியப்படமுடியாத ஒன்று என பல நகரசபை முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரிக்கும் ஆதனவரியினால் வீடுகளை வாங்குபவர்களும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் இந்த வரி அதிகரிப்பினால் பாதிப்படைவார்கள் எனவும் வீட்டுச் சந்தையை இது எவ்விதத்திலும் முன்னேற்றாது எனவும் நகரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் வாடகை வீட்டு சொந்தக்காரர்கள் இவ்வதிகரிப்பைக் குடியிருப்பாளர்களிமிருந்து அறவிட முற்படலாம் அல்லது வீடுகளை விற்க மூர்படலாம். இதனால் புதிய வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறையலாம் என அவர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.

மாகாண அரசின் இப்புதிய சட்டத்தினால் சராசரி $172 மில்லியன் டாலர் பண இழப்பை வாண் நகரசபை ( City of Vaughan) எதிர்நோக்குகிறது. இதனால் அந்நகரக் குடியிருப்பாளர்கள் 77 முதல் 88 வீத வரி அதிகரிப்பை எதிர்கொள்ளவேண்டி ஏர்படலாம். $19.6 மில்லியன் பண இழப்பை எதிர்நோக்கும் விட்சேர்ச்-ஸ்ரோஃப்வில் நகரசபை நான் கு வருடங்களுக்கு 52.3 % அதிகரிப்பை எதிர்நோக்கவேண்டி வரும் (20.3%). இதே போன்று நியூ மார்க்கெற் வாசிகள் 15% ஆதன வரி அதிகரிப்பையும், மிஸ்ஸிஸாகா வாசிகள் 10% அதிகரிப்பையும், பிறம்டன் நகர் வாசிகள் 9% அதிகரிப்பையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம். சில நகரசபைகள் பனியகற்றல் போன்ற சில சேவைகளைக் குறைப்பதன் மூலம் வருமான இழப்புகளை ஈடுசெய்ய முயற்சிக்கலாம். மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு நகரசபை அலுவலகங்களையோ அல்லது உங்கள் மாகாண அரசின் உறுப்பினர்களையோ தொடர்பு கொள்ளுங்கள். (Photo by Avel Chuklanov on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *