Maintenance

ரொறோண்டோ வாடகைக் குடியிருப்பு: யார் பனி வழிப்பது?

இது குளிர்காலம். அடுத்த வருடம் ஏப்ரல் வரை பனிப்பொழிவிலிருந்து தப்ப முடியாது. சிறுவர்களுக்கு இது குதூகலத்தைத் தந்தாலும் முதியவர்களுக்கும் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் பனிப்பொழிவு சிம்ம சொப்பனம் தான். குறிப்பாகப் பொது நடைபாதைகளைக் கொண்ட வீடுகளின் சொந்தக்காரர்களுக்கு இது தலையிடி தரும் விடயம்.

பொதுப் பாதைகளின் பனிவழிப்பு தொடர்பான சட்டங்களை பெரும்பாலும் நகரசபைகளே இயற்றுகின்றன. அதாவது பொதுமக்களிடமிருந்து ஆதனவரியை அறவிடும் நகர் அல்லது மாநகர சபைகளே இவ்விதிகளை இயற்றுகின்றன. அந்த வகையில் ஒவ்வ்வொன்றும் ஒரே மாதிரியான சட்டங்களை இயற்றத் தேவையில்லை.

ரொறோண்டோவைப் பொறுத்தவரையில் வாடகைக் குடியிருப்புகளில், அவை தொடர்மாடிக் குடியிருப்புகளாகவோ அல்லது பலர் பகிர்ந்துகொள்ளும் வாடகைக் குடியிருப்புகளாகவோ இருப்பின் அங்குள்ள பொதுப்பாதைகளைச் சுத்தமாக வைஜ்திருப்பது வீட்டுச் சொந்தக்காரரின் கடமை. ஆனால் சிலர் குடியிருப்பாளரோடு செய்துகொள்ளும் ஒப்பந்தங்களில் பனி வழிப்பது, புல் வெட்டுவது போன்ற விடயங்களை குடியிருப்பாளர்கள் தலைகளில் சுமத்திவிடுவது வழக்கம். இப்பொதுப்பாதைகளில் யாராவது வழுக்கி விழுந்து அவர் ஒரு பாரிய தொகை நட்ட ஈட்டைக் கோரினால் சட்டம் கையெழுத்திட்ட பத்திரங்களையே துணைக்கழைக்கும். எனவே குடியிருப்பாளர் இவ்வொப்பந்தங்களை நுணுக்கமாகப் பரிசீலித்து கையெழுத்திட வேண்டும். குறிப்பாக பல வாடகைக் குடியிருப்பாளர்கள் அறைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அவரவருக்கென பொதுப்பாதைகள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் அப் பொதுப்பாதைகளைச் சுத்தம் செய்யும் பொறுப்பு வீட்டுச் சொந்தக்காரரையே அடையும்.

ரொறோண்டோ நகரின் பனி வழிக்கும் சட்டத்தின்படி பொது நடைபாதைகள் சுத்தம் செய்யப்படவேண்டுமெனக் கேட்கிறதெ தவிர அவற்றை யார் சுத்தம் செய்யவேண்டுமெனக் கோரவில்லை. அப்பொறுப்பு வாடகை ஒப்பந்தத்தின் படியோ அல்லது தனியாகச் செய்யப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரமோ தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென ந்கரசபைகள் எதிர்பார்க்கின்றன. ஆனாலும் வீட்டுரிமைகளுக்கான கனடிய மையத்தின் பணிப்பாளர் கருத்துப்படி, பனி வழிப்பது, சுத்தம் செய்வது வீட்டுரிமையாளரது கடமை என ஆணித்தரமாகக் கூறுகிறார்.

ஒன்ராறியோ மாகாணத்தின் வாடகைக் குடியிருப்பாளர் சட்டத்தின் (RTA) (இது ரொறோண்டோ நகரசபையின் சட்டத்தை மீறும் அதிகாரம் கொண்டது) 20 ஆவது அம்சம் கூறுவதன் பிரகாரம் “வாடகைக் குடியிருப்பின் பராமரிப்பும் செப்பனிடுதலும் வீட்டின் உரிமையாளரையே சாரும், ஆகவே பனி வழிப்பும் சுத்தம் பேணுதலும் வீட்டு உரிமையாளரின் பொறுப்பு. வாடகைக் குடியிருப்பாளர்கள் வீட்டின் சுத்தத்திற்கு மட்டுமே பொறுப்புடியவர்களாகிறார்கள். அது மட்டுமல்லாது வீட்டில் வதியும் வாடகைக் குடியிருப்பாளர்களது பெயர்கள் அனைத்தும் இந்த RTA படிவத்தில் இருக்கவேண்டுமென்பதோடு, அவரவர்களின் கையெழுத்துக்களும் பெறப்பட்டிருக்க வேண்டும். குடியிருப்பாளர் இவ்விடத்திற்குப் போய் 1 மாத காலத்துள் இவ்வொப்பந்தம் (RTA) பரிமாறப்பட்டிருக்க வேண்டும். அதில் குடியிருப்பாளர்களின் கடமைகள் என்னவென்பது விபரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறது மாகாணச் சட்டம். இதில் குடியிருப்பாளருக்கெனத் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருப்பின் அதைச் சுத்தம் செய்யும் பொறுப்பு குடியிருப்பாளருடையதே எனச் சமீபத்திய ஒன்ராறியோ மேல்முறையீட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது.

ரொறோண்டோ நகரசபையைப் பொறுத்தவரையில் வீட்டை அண்டியிருக்கும் பொதுப்பாதைகளைச் (side walks) சுத்தம் செய்வது யாராயிருந்தாலும் பரவாயில்லை ஆனால் சுத்தம் செய்யப்பட்டுவிட்டல் சரி என்பதுவே அதன் நிலைப்பாடு. இங்கு வரியிறுப்பாளர் வீட்டுச் சொந்தக்காரர் என்பதால் அவர் மீதுதான் நட்ட ஈடு கோரப்படும். நகரசபைக்கும் வாடகைக் குடியிருப்பாளருக்குமிடையில் இது குறித்த பிடுங்குப்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஒப்பந்தத்தில் “வாடகைக் குடியிருப்பாளரே பனி வழிப்பதற்குப் பொறுப்பென” குறிப்பிட்டிருந்தால் அப்பிணக்கை நீதிமன்றத்தில் இருதரப்பும் தீர்த்துக்கொள்ள முடியும். நகரசபை இதில் தலையிடாது.

வாடகைக் குடியிருப்பாளரும் வீட்டுரிமையாளரும் RTA இற்கு அப்பால் வேண்டுமானால் தனியான கையெழுத்து ஒப்பந்தங்களைச் செய்துகொண்டாலும் அவற்றை நீதிமன்றங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்பதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். Photo by Mike Cox on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *