ரொறோண்டோ வீட்டுரிமையாளர்கள் இனிமேல் முற்றத்தை வாகனத் தரிப்பிடமாக மாற்ற முடியாது
ரொறோண்டோவின் சில பகுதிகளில் வீட்டுரிமையாளர்கள் தங்கள் பசும்புல் முற்றங்களில் கற்களைப் பதித்து வாகனங்கள் தரிக்குமிடமாக மாற்றி வருகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கவில்லையாயினும் சிலர் இச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து மீறல்களைச் செய்து வருகின்றனர்.
2021 முதல் இம் மீறல்களைச் செய்ய ரொறோண்டோ மாநகரசபை அனுமதிக்கப் போவதில்லை. பார்க்டேல்/ஹை பார்க் கவுன்சிலர் கோர்ட் பேர்க்ஸ் கேட்டுக்கொண்டதையடுத்து நகரசபையின் திட்டமிடல் குழு இச் சட்டத்தைத் திருத்தவிருக்கிறது.
“பசுந்தரைகளை அகற்றி அதில் வாகனங்கள் தரிப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லையெனினும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து, சில வீட்டுரிமையாளர் நகராட்சியின் மீள்பார்வைச் சபையை (committee of adjustment) அணுகி மாற்றத்திற்கான அனுமதிகோரி விண்ணப்பிக்கின்றனர். மீள்பார்வைச் சபை இதற்கு இணங்கும்போது நகராட்சி தனது சட்டத்தையே மீறி, தெருவோர அணையை வெட்டி தரிப்பிடங்களை அமைக்க அனுமதியை வழங்குகிறது. இப்படியான தரிப்பிடங்களை நகராட்சி அனுமதிக்காதிருப்பதற்குக் காரணம் இருக்கிறது” என கவுன்சிலர் பேர்க்ஸ் தெரிவிக்கிறார்.
புதிய ரக மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு வீட்டுக்கு அருகில் தரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பது சில வீட்டுரிமையாளர்களின் காரணம்.
அதே வேளை, வீட்டு முற்றங்களில் குறிப்பிட்ட அளவு பசுந்தரைகளைக் கட்டாயமாக வைத்திருக்கவேண்டுமென்பதற்கும் நகராட்சி நான்கு வலுவான காரணங்களை வைத்திருக்கிறது.
- மழையோ அல்லது உருகும் பனியோ நிலத்தினால் உறிஞ்சப்படுவதற்குப் பசுந்தரை தேவை. அது கற்களினாலோ அல்லது சீமந்தினாலோ பரவப்படும்போது தண்ணீர் கால்வாய்க்குள் ஓடுகிறது. கால்வாய்கள் ஒரு குறிப்பிட்ட அளவு நீரைக் காவுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அடை மழை அல்லது அடை பனி காலங்களில் மேலதிக நீர் நிரம்பி வழிந்தால் வீடுகளில் புகுந்துவிடுகிறது. இக் கழிவு தண்ணீர் ஒன்ராறியோ ஏரிக்குள் சென்று அதை அசுத்தம் செய்துவிடக்கூடாது என்பதற்காக நகராட்சி பெருந்தொகையான பணத்தைச் செலவழித்து நீர்த் தேக்கங்களை (holding tanks) அமைக்கவேண்டியுள்ளது.
2. பசுந்தரையால் உறிஞ்சப்படும் நீர் புற்களையும் தாவரங்களையும் அவற்றில் வாழும் உயிரினங்களையும் உயிரோடு வைத்திருக்கிறது.
3. தெருவோர அணைகளை வெட்டித் தமக்கெனப் பாதைகளை உருவாக்குவதால் ஏனையோரின் தெருவோரத் தரிப்பிடங்கள் குறைக்கப்படுகின்றன.
4. சில தெருக்களின் ஓரத்தில் நடைபாதைகள் இருப்பின் அவற்றைக் கடந்து வாகனங்கள் தரிப்பிடத்துக்குச் செல்லவேண்டும். இது பாதசாரிகளின், குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவிருக்கிறது.
இக் காரணங்களுக்காக கவுன்சிலர் பேர்க்ஸ் சட்டத்தை முறையாக அனுசரிக்கும்படி நகரசபைக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். மார்ச் 2021 இற்கு முதல் அவரது கோரிக்கைக்குப் பதிலளிக்கும்படி திட்டமிடல் சபைக்கு நகராட்சி அவகாசம் கொடுத்திருக்கிறது.