கல்வி

வகுப்புகளில் கைத்தொலைபேசிக்குத் தடை

ரொறோண்டோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள பாடசலைகளில் தற்போது பிரயோகத்திலிருக்கும் கைத்தொலைபேசிப் பாவனைச் சட்டத்தின்படி மாணவர் தம் கல்வி, சுகாதாரம், விசேட கல்வித் தேவைகளுக்காக கைத்தொலைபேசிகளைப் பாவிக்க அனுமதியுண்டு. ஆனால் உத்தேசிக்கப்பட்ட தேவைகளுக்காக அவை பாவிக்கப்படுவதில்லை எனவும் மாணவர்களுக்கான பாவனை அனுமதி முழுமையாக நிறுத்தப்படவேண்டுமெனவும் கோரி ரொறோண்டோ கவ்விச்சபையின் தலைவர் றேச்செல் ஷேர்ணோஸ் லின் கடந்த புதனன்று முன்மொழிவுக்கான அறிவிப்பொன்றைச் செய்திருக்கிறார். இதற்கு ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

“கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட் ஃபோன்களில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிவருவதோடு மாணவர்களின் மனநலம், கல்வி ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன எனவும் மாணவர்களின் உள நலம், கல்வி ஆகியவற்றை உயர்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு உறுதுணையாக நல்ல கொள்கைத் திட்டமொன்றை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும்” என ஷேர்ணோச் லின் தெர்வித்துள்ளார்.

“மாணவர்கள் வகுப்பிற்கு வருவதே அவர்களுக்கிடையில் ஊடாட்டங்களை மேற்கொண்டு சமூகப் பண்பியலை வளர்த்துக்கொள்வதற்காகத் தான். இங்கு வந்தும் அவர்கள் தமது ஃபோன்கள் வழியாகத் தொடர்புகளைப் பேணிக்கொண்டால் வகுப்புக்களுக்கு வரவேண்டியதில்லை. இப்போதும் எமது பாடசாலைகளில் கம்பித் தொலைபேசிகள் இருக்கின்றன என்பதைப் பலரால் நம்ப முடியாது. பெற்றோர் தமது பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டி ஏற்பட்டால் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பிள்ளைகளோடு பேசமுடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

2019 இல் ஒன்ராறியோ மாகாண அரசு பாடசாலைகளில் கைத்தொலைபேசி பாவனை கட்டுப்பாடுகள் பற்றிய அறிவூட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே கைத்தொலைபேசிப் பாவனை அனுமதிக்கப்படவேண்டும் என்பதே அதன் சாரம்சம். ஆனால் இச்சட்டத்தை பிரயோகிக்கும் தேர்வை அரசாங்கள் கல்விச்சபைகளிடம் விட்டிருந்தது. இதன் பிரகாரம் ரொறோண்டோ கல்விச்சபைத் தலைவர் கைத்தொலைபேசிகளின் முழுமையான தடையொன்றை பிரேரித்திருக்கிறார்.

ஜனவரி 18, 2024 அன்று சபையில் இப்பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. சபை இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் சபை தேவையான உபவிதிகளை இயற்றி நடைமுறைக்கு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Photo by Ghen Mar Cuaño on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *