veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Health

வீடுகளில் ரேடான் வாயு எச்சரிக்கை!

வீடுகளின் நிலத்தினூடு கசியும் ரேடான் வாயு, நீண்ட காலத்தில், நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாகிறது எனவும் கனடாவில் வீடுகளில் வசிப்பவர்கள் தமது வீடுகளில் இருக்கக்கூடிய ரேடான் வாயுவின் அளவைப் பரீட்சித்துக்கொள்ள வேண்டுமெனவும் ‘Take Action on Radon’ என்னும் அமைப்பைச் சேர்ந்த பாம் வார்க்கென்ரின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேடான் என்பது ஒரு கதிரியக்க வாயு. நிறம், மணமற்ற இவ்வாயு கல், மண், நிலக்கீழ் நீர் ஆகியவற்றிலிருந்து கசிந்து நிலக்கீழறையில் நிலத்திலோ அல்லது சுவரிலோ இருக்கக்கூடிய வெடிப்புகளினூடோ அல்லது வடிகால் துவாரங்களினூடோ கசிந்து வீட்டின் இதரபகுதிகளுக்கு பரவி அங்கு தங்கிவிட நேரிடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் நிலக்கீழறைகள் (basement) எரிவாயு உபகரணங்களும் உபரி தளபாடங்களும் வைப்பதற்கென்றே கட்டப்பட்டன. எரிவாயு உபகரணத்திலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் மற்றும் நிலக்கசிவு வாயுக்கள் என்பன அறைக்குள் தங்கிவிடாமலிருக்க அக்காலத்தில் நிலக்கீழறை யன்னல்கள் வேண்டுமென்றே வெளிக்காற்றை உள்ளே எடுக்கும் விதத்தில் வைக்கப்பட்டன. இதனால் இந்நச்சு வாயுக்கள் இய்யன்னல்களூடு தப்பிச்செல்லக்கூடியதாக வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

தற்காலங்களில் நிலக்கீழறையின் சுவர்கள், மக்கள் வசிப்பதற்கென காற்றுப்புகாத வகையில இறுக்கமாக அடைக்கப்பட்டாலும் நிலம் சலாகைகள் மூலம் மூடப்படுவது வழக்கம். சில வீடுகளில் பளிங்குக் கற்களால் மூடப்படுவதுமுண்டு. எப்படியானாலும் நிலத்தில் இருக்கும் வெடிப்புகள், சலாகைகளின் இடைவெளிகள் ஆகியவற்றினூடாக இந்த ரேடான் வாயு கசிந்து வீட்டிற்குள் வந்துவிடுகிறது. இதில் கிரானைட் வகையான மண்ணில் கட்டப்பட்ட வீடுகளில் அதிக ரேடான் வாயு கசிகிறதெனக் கூறப்படுகிறது.

வீடுகள் மாத்திரமல்லாது முறையாக மூடப்படாத நிலங்களைக் கொண்ட வேலைத் தலங்களிலும் (factories) இவ்வாயு கசிவதற்கு சாத்தியங்களுண்டு. ஆனால் வேலைத் தலங்களில் காற்றோட்டம் அதிகமாக இருப்பதால் ரேடான் தேங்கி நிற்க சந்தர்ப்பங்கள் குறைவு. வீடுகளில் குளிர் வரக்கூடாது என்பதனால் யன்னல்களைத் திறக்காமல் இருக்கும்போது இவ்வாயு தேங்கி நிற்கச் சந்தர்ப்பங்கள் அதிகம்.

கனடாவில் வருடமொன்றுக்கு 3,200 பேர் மட்டில் ரேடான் வாயுவால் ஏற்படும் புற்றுநோய்களால் மரணமாகிறார்கள். ஆனாலும் இதன் தாக்கம் பற்றி போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நோய்க்கட்டுப்பாட்டுக்கான பி.சீ. மையம் சேகரித்த தகவல்களின்படி வடக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் ரேடான் வாயுவின் பாதிப்பு அதிகமெனவும் இதர பகுதிகளில் இன்னும் போதுமான தரவுகள் சேகரிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் 2009-2013 வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் 25%மான ஒன்ராறியோ வீடுகளில் அளவுக்கு மீறிய ரேடான் வாயு இருக்கிறதென உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.

வீடுகளில் ரேடான் வாயுவின் செறிவை அளப்பதற்கேற்ற கருவிகள் விற்பனைக்குள்ளன. இருப்பினும் சிபார்சு செய்யப்பட்ட கருவிகளை வாங்கும்படி takeactiononradon.ca அறிவுறுத்துகிறது. (Image Credit:takeactionradon.ca)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *